Tamilnadu
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.9.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, திறன் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்” எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிக்கொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான விருது வழங்கப்பட்டு வருகிறது.
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், ஒரு இலட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகை, தாமிர பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-2025-ஆம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகளை - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணி வின்சென்ட் (இயற்கை நார் பொருட்கள்) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி. வீழிநாதன் (உலோக தகட்டு வேலை), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி சொக்கர் (மியூரல் ஓவியம்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குப்பு சுப்பிரமணி (கற்சிற்பம்);
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த து. ரமணி (துணி பொம்மைகள்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த என். பூவம்மாள் (சித்திரத்தையல்) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ந. துரைராஜ் (மரச்சிற்பம்) ஆகிய 7 விருதாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், “பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் கைத்திறத் தொழிலில் சிறந்த கைவினைஞர்களின் பங்களிப்பு, திறன் மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் 12 இலட்சம் ரூபாய் மதிப்பிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் 4 கிராம் தங்கப் பதக்கம், ரூபாய் 50,000/- பரிசுத்தொகை, தாமிரபத்திரம் மற்றும் சான்றிதழ் கொண்டதாகும்.
அதன்படி, 2024-2025-ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ. வெங்கட்ராமன் (பஞ்சலோகசிற்பம்) மற்றும் சி. ரமேஷ் (தஞ்சாவூர் ஓவியம்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மு. குப்புசாமி (தஞ்சாவூர் ஓவியம்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி. கோபாலகிருஷ்ணன் (மரச்சிற்பம்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த க. முருகன் (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரா. ஹரிகிருஷ்ணன் (சுடு களிமண் சிற்பம்);
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செ. ரஹ்மத் மீராள் பீவி (பாய் நெசவு), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி. ஸ்ரீ குமாரி (இயற்கைநார் பொருட்கள்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பா. மேகன்டூ (ஆணி நூல் கலை) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரா. கோகுல்நாத் (நெட்டி வேலை) ஆகிய 10 கைவினைஞர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 4 கிராம் தங்கப் பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை, தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!