Tamilnadu

ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.

பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம்

தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம், 1960ன் பிரிவு 38ன் கீழ் நாய் இனக்கட்டுபாட்டு விதிகள்-2023 (ABC Rules 2023, Ministry of Fisheries, Animal Husbandry and dairying, Govt. of India Notification dated on 10.03.2023) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகு 5 நாட்கள் நாய் இனக் கட்டுப்பாட்டு மையத்தில் பாரமரித்து, வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பிடித்த இடத்திலேயே விடப்பட வேண்டும்.

தெருநாய்களை மனிதாபிமான முறையில் வலைகள் மற்றும் கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும்.

பாலூட்டும் நாய்கள் மற்றும் ஆறு மாத வயது குறைவான நாய்க்குட்டிகளை இனப்பெருக்க அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தக் கூடாது.

தெருநாய்களை அழிப்பதற்கு (Culling) சட்டத்தில் வழிவகை இல்லை

நோய் முற்றிய, இறக்கும் தருவாயில் உள்ள காயமுற்ற நாய்களை மட்டுமே கண்காணிப்புக் குழுவால் நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அவற்றை கருணை கொலைக்கு உட்படுத்த முடியும்

தெருநாய்கள் உள்ளிட்ட எந்த விலங்குகளையும் விஷ (Strychnine) ஊசி செலுத்தியோ பிற கொடுமைப்படுத்தும் முறையிலோ காயப்படுத்துவதோ, கொல்வதோ குற்றமாகும்.

மேலும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 (BNS Act-2023), சட்டம், பிரிவு-325 ன் படி, “எந்த ஒரு விலங்கையும் கொல்வதன் மூலமோ, விஷம் வைப்பதன் மூலமோ, ஊனப்படுத்துவதன் மூலமோ, பயனற்றதாக மாற்றுவதன் மூலமோ, தீங்கு அல்லது சேதம் செய்பவர்கள் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவர்”.

புகார் தொடர்பான உதவி எண்கள்

இச்சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களிடமிருந்து தெருநாய் தொல்லைகள் தொடர்பான புகார்களைப் பெற 1913 என்ற உதவி எண்ணிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் சேவைக்கான வாட்ஸ்ஆப் எண் 94450 61913 வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.

தெருநாய்களைப் பிடித்து QR Code மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் நடவடிக்கைகள்

தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும் 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, நாய்களைப் பிடித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாய்களைப் பிடிப்பதற்காக வலைகள் வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படுகின்றன. நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக, QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,255 தெருநாய்களுக்கு மேற்கண்ட QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கழுத்துப்பட்டை QR குறியீடு & மைக்ரோசிப் செலுத்தும் பணி கீழ்காணும் நடைமுறையின்படி செயல்படுத்தப்படுகிறது.

QR கோடுடன் உள்ள கழுத்துப்பட்டை நாயின் கழுத்தில் கட்டப்பட்டு ஸ்கேன் செய்யப்படும். இதன்மூலம் GPS இருப்பிடம் பதிவு செய்யப்படும்.

நாய்இனக்கட்டுபாட்டு மையம்

மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்படும்.

கருத்தடை அறுவை சிகிச்சையின் போது மைக்ரோசிப் பொருத்தப்படுதல்.

கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோசிப் மீண்டும் ஸ்கேன் செய்யப்படும்.

நாய்இனக்கட்டுபாட்டு மையத்தில் நாய்கள் விடுவிக்கப்படும் போது

மைக்ரோசிப் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதி செய்யப்படும்.

தெருநாய்கள் விடுவிக்கப்படும் இடம்

QR குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு புவிசார் குறியீடு (GPS) மூலம் இருப்பிடம் உறுதி செய்யப்படும்.

கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள்

தெருக்களில் பிடிக்கப்படும் தெருநாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களை பரிசோதித்து, உடற்தகுதியுள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு 4 முதல் 6 நாட்கள் வரை பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிக்கப்படும் நாய்களுக்கு செறிவூட்டப்பட்ட (Pellet) உணவும், சமைத்த அசைவ உணவும் வழங்கப்பட்டு வருகிறது. வெறிநாய்க்கடி நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினசரி சராசரியாக தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களில் மேற்கொள்ளப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை விவரங்கள்

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய 3 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் சராசரியாக தலா 30 நாய்கள் வீதம் 90 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் சராசரியாக 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் சராசரியாக 10 தெருநாய்களுக்கும் என இந்த 5 நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 115 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவரம்

மேற்கண்ட மையங்களின் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 15.09.2025 வரை 88,439 தெருநாய்கள், 46,235 செல்லப் பிராணிகள் என மொத்தம் 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும், இதில் கருத்தடை செய்ய தகுதியுள்ள 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெருநாய்கள் கணக்கெடுப்பு விவரம்

கடந்த ஆண்டு (2024) Worldwide Veterinary Services (WVS) என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1,80,000 தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

1. மண்டலம் : 1 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 11,957

2. மண்டலம் : 2 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 7,101

3. மண்டலம் : 3 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 17, 096

4. மண்டலம் : 4 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 12,671

5. மண்டலம் : 5 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 8,542

6. மண்டலம் : 6 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 12,684

7. மண்டலம் : 7 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 23,980

8. மண்டலம் : 8 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 12,096

9. மண்டலம் : 9 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 7,642

10. மண்டலம் : 10 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 8,702

11. மண்டலம் : 11 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 14,154

12. மண்டலம் : 12 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 4,875

13. மண்டலம் : 13 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 10,782

14. மண்டலம் : 14 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 11,680

15. மண்டலம் : 15 --> மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) : 16,195

- மதிப்பிடப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை (2024) மொத்தம் : 1,80,157

தெருநாய்கள் பெருக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்தும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அதிகளவில் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பெண் நாய் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு இருமுறை கருவுற்று, சுமார் 10 குட்டிகள் வரை ஈனும் வாய்ப்புள்ளது என்பதால், அதிகளவில் நாய்கள் பெருக்க உருவாகிறது. எனவே, பெண் நாய்களை அதிக எண்ணிக்கையில் பிடித்து அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலமே அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும். எனவே, இப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக 10 எண்ணிக்கையிலான நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி கீழ்காணும் இடங்களில் நடைபெற்று வருகிறது.

நாய் இனக்கட்டுபாட்டு மையங்கள் அமையவிருக்கும் இடங்கள்

1. திருவொற்றியூர் மண்டலம் - சாத்தாங்காடு, கோட்டம் – 07

2. மணலி மண்டலம் - செட்டிமேடு, கோட்டம் – 17

3. மாதவரம் மண்டலம் - சி எம் டி ஏ டெர்மினல், மாதவரம் கோட்டம் - 25.

4. தண்டையார்பேட்டை மண்டலம் - செட்டிமேடு, கோட்டம் – 17 (தண்டையார்பேட்டை மண்டலத்திற்காக மணலியில் கட்டப்பட்டு வருகிறது.)

5. இராயபுரம் மண்டலம் - கண்ணப்பர் திடல் அருகில், கோட்டம் – 58

6. அம்பத்தூர் மண்டலம் - கள்ளிக்குப்பம், கோட்டம் -83

7. ஆலந்தூர் மண்டலம் - நந்தம்பாக்கம், கோட்டம் -158

8. பெருங்குடி மண்டலம் - ம.பொ.சி. நகர், பள்ளிக்கரணை, கோட்டம் -185

9. தாம்பரம் – வேளச்சேரி பிரதான ரோடு, கோட்டம் -188

10. சோழிங்கநல்லூர் மண்டலம் - பயோ சி.என்.ஜி. பிளான்ட், கோட்டம் -194

தற்போது புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை ஆகிய மையங்களில் தலா 140 பராமரிப்புக் கூண்டுகள் (Kennels & Cages) பயன்பாட்டில் உள்ளது. கருத்தடை அறுவை சிகிச்சை எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த கூடுதலாக ஒவ்வொரு மையத்திற்கும் தலா 100 எண்ணிக்கையிலான கூண்டுகள் (Kennels & Cages) அமைக்கப்பட்டு வருகிறது.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள தற்போது 16 கால்நடை உதவி மருத்துவர்கள் ,11 ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் 5 கருத்தடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தம் 78 நாய் பிடிக்கும் ஊழியர்களும், 105 கருத்தடை மைய ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பணிகளை கண்காணிக்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மூலம் 3 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகளில் ஒத்துழைக்க அறிவுசார் பங்குதாரர்களாக (Technical Partner) Worldwide Veterinary Services, Besant Memorial Animal Dispensary ஆகிய தொண்டு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடவடிக்கைகள்

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் திட்டம் 09.08.2025 அன்று மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்று, மொத்தம் 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023, பிரிவு 292-ன் படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்கள் செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்யவும், இணையவழியிலும், வாட்ஸ்ஆப் எண் 94450 61913 வாயிலாகவும் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை எளிதாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த உரிமம் பெறுவதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்போர் செல்லப் பிராணி ஒன்றிற்கு மிகக் குறைந்த கட்டணமாக ரூ.50/- மட்டும் உரிமக் கட்டணமாக செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக உரிமம் பெற செல்லப்பிராணியின் உரிமையாளர் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றப்பட்ட விவரங்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, ரூ50/-ஆண்டு கட்டணம் பெறப்பட்டு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள்

கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணியின் உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை/தெரு/சாக்கடையிலும் தனது நாய்/செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை /தெரு/சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டால், அக்கழிவை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும்.

மேலும், செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான உரிமங்கள் மற்றும் மைக்ரோசிப் பொருத்துதல்

இதுவரை இணைய வழியாக 13,287 செல்லப்பிராணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும்போதே அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப்பிங் செலுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை (Pet Abandonment) தடுக்கவும் இயலும்.

செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களின் தரவுகளை சேமித்து கண்காணித்தல் தொடர்பான நடவடிக்கைகள்

2,00,000 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களின் தரவுகளை சேமித்தல் மற்றும் மேலாண்மை செய்தல், பிரத்யேக மென்பொருள் உருவாக்குதல், விரிவான தளத்தை வடிவமைத்தல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல், நாய் பிடிப்பவர்களுக்கான மொபைல் செயலியை உருவாக்குதல், செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் போர்டல் உருவாக்குதல், பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாண்பமை உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு நாள் : 22.08.2025

கடந்த 22.08.2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி, வெறிநாய்க்கடி நோயால் (Rabies Affected Dogs) பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநாய்க்கடி நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் (Rabies Suspected Dogs), ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவை பிடிக்கப்பட்டு, அவை பிரத்யேகமான காப்பகத்தில் வைத்து உரிய சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும். அவை எக்காரணம் கொண்டும் மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது.

இந்த மூன்று விதமான நாய்களை தவிர பிற தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு கருத்தடை சிகிச்சை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அவை மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய்களுக்கு உணவு அளிப்பதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு பிரத்யேக இடத்தை ஒதுக்கி, அவ்விடத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பு பலகையை வைத்திட வேண்டும். அந்த இடத்தில் மட்டும் தான் உணவு வழங்க வேண்டும். இந்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் உணவு வழங்கக்கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாண்பமை உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறிநாய்க்கடி நோயால் (Rabies Affected Dogs) பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநாய்க்கடி நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் (Rabies Suspected Dogs), ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவற்றிற்கு புறநகர் பகுதிகளில் 500 நாய்கள் வைத்து பராமரிப்பதற்காக பிரத்யேகமாக இடம் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: “இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!