Tamilnadu
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பெரம்பூர் மூர்த்திங்கர் பகுதியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மொத்தம் 295.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,480 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து ஆற்றிய உரை,
மனிதர்களுக்கான அத்தியாவசிய தேவைகளில் மிக, மிக முக்கியம் என்று பார்த்தால், அது அவர்கள் இருக்கக்கூடிய இடம். அந்த தேவையை நம்முடைய அரசும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பார்த்து, பார்த்து உங்களுக்கு தேவையானவற்றை நிவர்த்தி செய்து கொண்டு வருகின்றார்.
ஒரு காலத்தில் சென்னை மாநகரில் பார்த்தீர்கள் என்றால், குறிப்பாக, இந்த வட சென்னை பகுதியில் குடிசை பகுதிகள் அதிகமாக இருந்தது. வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு குடும்பமும் கான்கிரீட் கூரையின் கீழ் இருக்க வேண்டும் என்று கலைஞர் அவர்கள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனால் தான், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 1970 ஆம் ஆண்டு ஆட்சி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆரம்பித்தார். அந்த குடிசை மாற்று வாரியம் வந்த பிறகு தான், தமிழ்நாட்டில் குடிசைகள் எல்லாம் கோபுரமாக, கோபுரத்தைவிட உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளாக அது மாறி வந்தது.
குறிப்பாக, ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 ஆயிரம் வீடுகளை, இந்த வாரியம் மூலமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, 18 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைகளுக்கான அந்த பட்டாவை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.
வீடு வேண்டும் என்பது உங்களுடைய பல நாள் கோரிக்கை. கோரிக்கை மட்டும் இல்லை. அது உங்களுடைய உரிமை, அது உங்களுடைய கனவு. அந்தக் கனவை அந்த உரிமையை இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நினைவாக்கி, நிஜமாக்கி கொடுத்திருக்கிறார்.
உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் ஆர்.டி.சேகராக இருக்கட்டும், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஐட்ரீம் மூர்த்தியாக இருக்கட்டும், இவர்கள் என்னைய சந்திக்கிற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இந்த குடியிருப்புகளை சீக்கிரம் கட்டி முடித்து மக்களிடம் அவர்களின் உபயோகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
நானும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, செயலாளர் மூலமாக, அமைச்சர் மூலமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் எந்த அளவில் இருக்கிறது. எவ்வளவு சதவீதம் முடிந்திருக்கிறது. எப்போது கட்டி முடிப்போம். எப்போது பயனாளிகளிடம் கொடுப்போம் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.
ஏன் என்றால் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இந்த திட்டப்பணிகளைத் தொடர்ந்து ஃபாலோ செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீடுகள், கட்டி முடிக்கப்படும் வரை, நீங்கள் அத்தனை பேரும் வெளியில் தங்கி இருந்தீர்கள். அதையும் முதலமைச்சர் அவர்கள் உணர்ந்திருந்தார்.
அதற்கான, உதவித்தொகையாக முதல் கட்டமாக 8 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் அவர்கள் கொடுத்தார். அது போதாது என்று நீங்கள் வைத்த கோரிக்கைகளால், உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் அவர்களிடம் அந்த கோரிக்கை வைத்தார்கள்.
உடனே முதலமைச்சர் அவர்கள் முதல் கட்டமாக கொடுத்த 8 ஆயிரத்தை மீண்டும் இரண்டாவது கட்டமாக அதை உயர்த்தி 24 ஆயிரமாக கொடுத்தார். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எடுத்த அந்த தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த ரிசல்டா இன்றைக்கு உங்கள் வீடுகளுக்கான சாவிகள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கு.
வீடு என்றால், ஏதோ பேருக்கு கிடையாது. இன்றைக்கு உங்கள் ஒவ்வொருத்தருக்கும் கிட்டத்தட்ட 400 சதுர அடி பரப்பளவில் ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் வழங்கப்பட்டு இருக்கு. வீடுமட்டும் இல்ல, உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் உங்கள் குடும்பத்தில் ஒருத்தராக ஒவ்வொருத்தருக்கும் அரிசி, புடவை, வேஷ்டி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை உங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்த்துகள், நன்றி. உங்களுடைய திட்டப்பகுதியில் தரமான சாலை வசதி, கழிப்பிட வசதி, பூங்கா, தெரு விளக்கு இப்படி, எல்லா வசதிகளையும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் நம்முடைய அமைச்சர்.
இங்கே நிறைய மகளிர் வந்து இருக்கின்றீர்கள். நம்முடைய நான்கரை ஆண்டு அரசு, மகளிருக்கான அரசாக ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியிருக்கிறார். மகளிர் முன்னேற்றத்தில் அதிகம் கவனம் காட்டுகின்ற அரசாக நம்முடைய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் தான், இங்கே ஒதுக்கப்படுகின்ற அத்தனை வீடுகளுமே, இங்கே வந்திருக்கக்கூடிய இந்த வீடுகளில் இருக்கக்கூடிய மகளிர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இன்றைக்கு உங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் நீங்கள் தான் இதற்கு ஓனர். நீங்கள் மட்டும் தான் ஓனர்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரைக்கும் மகளிருக்கு என்னென்ன தருகிறேன் என்று வாக்குறுதி தந்தாங்களோ, அதை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக, ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கையெழுத்துதான்.
அதுதான் மகளிருக்கான விடியல் பயண திட்டம். இந்த நான்கரை வருடங்களில் மட்டும் மகளிர் கிட்டத்தட்ட 770 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளீர்கள். அது தான் இந்த திட்டத்துடைய வெற்றி. ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட மாதம் 1,000 ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் சேமித்து இருக்கின்றீர்கள்.
அடுத்து முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 22 லட்சம் குழந்தைகள் காலை எழுந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றால் தரமான உணவு, தரமான கல்வி தரப்படுகிறது. சமீபத்தில், சென்னைக்கு வந்து இந்த திட்டத்தை விரிவுபடுத்தி துவக்கி வைத்த பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தை பாராட்டி பேசி இருக்கின்றார்.
இந்த திட்டம் மிகச் சிறந்த திட்டம். இந்த திட்டத்தை என்னுடைய பஞ்சாப் மாநிலத்திலும் விரிவுபடுத்த போகிறேன் என்று கூறினார். இது தான் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி.
அடுத்து, அரசு பள்ளியில் படித்து, பள்ளிக் கூடம் சென்றால் மட்டும் பத்தாது உயர்கல்வி படிக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் சேர்ந்தாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் மூலமாக கல்வி ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். இதன் மூலமாக 8 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
அடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 2023-ல் இதே செப்டம்பர் மாதம், முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
சில இடங்களில் எங்களுக்கு கொடுக்கவில்லை எங்களுக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். இப்போது முகாம் நடத்தியிருக்கின்றோம். நடத்திய முகாமில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தான் விண்ணப்பித்துள்ளீர்கள்.
முதலமைச்சர் அவர்கள் சில தளர்வுகளை செய்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த முறை விடுபட்ட தகுதியான மகளிருக்கு அந்த மகளிர் உரிமைத் தொகையும் விரைவில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்குவார் என்று இந்த நேரத்தில் நான் கூறிக் கொள்கின்றேன்.
நம்முடைய அரசுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய இந்த ஆதரவு, உங்களுக்காக உழைக்க முழு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் முதலமைச்சர் அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது. நம்முடைய அரசு அமைந்த பிறகுதான், தென் சென்னைக்கு இணையாக இன்றைக்கு வட சென்னையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களைச் நாம் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக, வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் பெரம்பூர் கணேசபுரம் பாலம், ஆர்.கே.நகர்
தொகுதியில் கொருக்குப் பேட்டையில் பல பாலங்கள், ராயபுரம் போஜராஜன் நகரில் 30 வருட கோரிக்கை ரயில்வே சுரங்கப்பாதை, ஆர்.கே.நகரில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், பெரம்பூரில் 630 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகம் சீரமைக்கும் பணி, பல்வேறு பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி, புதிய நூலகங்கள், சமூக நலக் கூடங்கள், பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை, இது மாதிரியான குடியிருப்புகள் என்று, ஏராளமான திட்டங்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றது.
ஆகவே, அதோடு ஒரு பகுதியாக தான் இன்றைக்கு உங்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நாம் வீடு வாங்கிட்டோம், சொந்த வீடு கிடைத்துள்ளது என்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதோடு இருந்துவிட கூடாது. அரசு இந்த வீடுகளை உங்களுக்குக் கொடுத்தாலும், உங்களோட பங்களிப்புத் தொகையும் இதில் இருக்கிறது. உங்களுடைய பலவருட சேமிப்பை வைத்து கொடுத்திருப்பீர்கள்.
நகையை அடமானம் வைத்து, தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியோ இந்தத் தொகையை நீங்கள் கொடுத்து இருப்பீர்கள். ஆகவே, இந்த குடியிருப்புகளை நீங்கள் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் தாழ்மையோடு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக, தனியார் குடியிருப்புகள் மாதிரி, உங்களுக்குள்ளேயே ஒரு Association-ஐ உருவாக்கி முறையாக பராமரிக்க வேண்டும். உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். உங்களுக்காக இன்னும் உழைக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.
ஆகவே, நீங்களும் நம்முடைய அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்றைக்கு புதிய வீடுகளில் குடியேற இருக்கக்கூடிய, உங்கள் அத்தனை பேருடைய வாழ்க்கை செழிக்கட்டும் என, வாழ்த்தி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
Also Read
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!