Tamilnadu
ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரிப்பதா? : ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும் - வைகோ ஆவேசம்!
தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டுகாலம் மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் மறப் போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். இலட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது.
பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேக வெடிப்பால் உத்தரகாண்டில் பெரும் வெள்ளம் : அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - அச்சத்தில் மக்கள்!
-
நாடாளுமன்ற அவைக்குள் CISF வீரர்களை அனுமதித்தது யார்? : ஒன்றிய அரசுக்கு திருச்சி சிவா MP கேள்வி!
-
ரூ.18.26 கோடி செலவில் கிளாம்பாக்கம் காவல் நிலையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
நாட்டின் பணப்புழக்கத்தின் நிலை என்ன? : கிரிராஜன் MP எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில்!
-
கிராமத்தில் முதல் மருத்துவர் : வறுமையை வென்று மருத்துவ மாணவியான பூமாரி - அமைச்சர் பாராட்டு!