Tamilnadu
வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிவிக்க போவது எப்போது? : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!
வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் மழை அளவு போன்ற வானிலை தகவல்களை சேகரித்து, அதை பயன்படுத்தி, வானிலை முன்னறிவிப்புகளை வெளிட்டு வருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department, IMD).
மேலும், தொடர்ந்து வானிலை தரவுகளை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, வானிலை மாற்றங்களை கண்காணிக்கிறது. ஆனால் முறையாக வானிலை தரவுகள் கணிக்கப்பட்டு, பேரிடர் நேராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்க ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. வானிலை முன்னறிவிப்புகளை மேலும் துல்லியப்படுத்துவதற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
எனவே வானிலை முன்னறிவிப்புகளை மேலும் துல்லியப்படுத்துவதற்கு ஏதேனும் சிறப்பு திட்டங்கள் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு :-
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கடலோர மாவட்டங்களில் தானியங்கி வானிலை மையங்கள் (AWS) மற்றும் டாப்ளர் ரேடார்களை நிறுவும் திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? ஆம் எனில், அவை எந்தெந்த பகுதிகளில் நிறுவப்படவுள்ளது? அதற்கான காலக்கெடு எவ்வளவு?
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் டெல்டா பகுதிகள் உட்பட தமிழ்நாட்டின் புவியியல் பகுதிகளில், நடப்பு வானிலை நிலவரம் மற்றும் சில மணிநேரம் முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தெரிவிக்கப்படக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளை மேலும் துல்லியப்படுத்துவதற்கு ஏதேனும் சிறப்பு திட்டங்கள் உள்ளதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன?
வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்த மற்றும் பாதிப்புகளை குறைக்க, நடப்பு வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதிப்பு நேர்ந்த இடத்தை வரைபடங்கள் மூலம் தெரிவிக்கும் முறையையும் மேம்படுத்த, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் இணைந்து பணியாற்ற அரசு திட்டமிட்டுள்ளதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன?
தமிழ்நாட்டின் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களும் எளிதில் அணுகும் வகையில், IMD மொபைல் செயலியில், தமிழ் மொழியிலேயே விவசாயிகளுக்கான முன்னறிவிப்பு தகவல்களை வழங்க ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன?
இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!