Tamilnadu

பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் ஜூலை 21-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன்(09.07.2025) முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படும். அதன் விவரம் பின்வருமாறு:

அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணாக்கர் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் (09.07.2025) கால அவகாசம் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 13.08.2025 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: ”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!