Tamilnadu
“மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.7.2025) திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழா மற்றும் குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டட திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
“முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுமட்டுமல்ல, ஆய்வுக்கூட்டம், அரசுப்பணி என தொடர்ந்து Busy-ஆக இருந்தாலும், உங்களைப் போன்ற Young students-ஐ சந்திக்கின்றபோது எனக்கு Energy வந்துவிடுகிறது! அதிலும் students அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓ.கே. சொல்லிவிடுவேன்! இப்போதுகூட, திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது, இது முதல்முறை கிடையாது! ஏற்கெனவே, 2006-இல் “கல்லூரி நிறுவனர் நாள் விழா”-விற்கு வந்திருக்கிறேன். அடுத்து, இன்றைக்கு திறந்து வைத்திருக்கும் குளோபல் ஜமாலியன் பிளாக்கிற்கு அடிக்கல் நாட்டுவதற்கு 2022-இல் காணொலிக்காட்சி மூலமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
கடந்த மே மாதம்கூட “இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்” கலந்துகொண்டேன். ஒற்றுமையும் – சகோதரத்துவமும் எப்படி வலுப்பட வேண்டும் என்று நாட்டிற்கு வழிகாட்டும் நிறுவனமாக இந்த கல்லூரி இருக்கிறது! இங்கு உங்களுக்குள் உருவாகும் friendship எல்லா காலத்திற்கும் தொடர வேண்டும்! கல்லூரி நட்பு, old age வரை உறுதியாக இருக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும்! ஏனென்றால், இந்த கல்லூரியை உருவாக்கிய ஹாஜி ஜமால் முகமது சாஹிப் அவர்களும், ஜனாப் காஜா மியான் ராவுத்தர் அவர்களும் இப்படிப்பட்ட நல்லிணக்கம் உருவாகி, இந்தப் பகுதியில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ மக்களெல்லாம் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தார்கள்! அது நனவாகி, உங்களின் கல்விக் கனவையும் 75 ஆண்டுகளாக நனவாக்கி இருக்கிறது இந்தக் கல்லூரி! அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்!
ஹாஜி ஜமால் முகமது சாஹிப் அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் தலைமையில் ஈடுபட்டவர். 1931-இல் இலண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டவர். காந்தியடிகளிடம் ஒரு Blank Cheque-ஐ கொடுத்து, அதில் எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும், எழுதி விடுதலைப் போராட்ட நிதியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்ன வள்ளல் தான் அவர்.
அதேபோல, ஜனாப் காஜா மியான் ராவுத்தர் அவர்களும், சொந்தமாக கதர்த்துணி ஆலை நடத்தி அந்தத் துணிகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்தவர். இரண்டு வள்ளல்களும் காந்தி வழியைக் கடைப்பிடித்தவர்கள். காந்தி வழி - அம்பேத்கர் வழி - பெரியார் வழி என்று நமக்கான பல வழிகள் இருக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது. ஜனாப் காஜா மியான் ராவுத்தர் தந்தை பெரியாரிடம் பாசம் கொண்டிருந்ததோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னுடைய மனைவியோடு கலந்துகொண்டவர்! அப்படிப்பட்டவர் நன்கொடையாக வழங்கிய நூறு ஏக்கர் நிலத்தில் ஜமால் முகமது சாஹிப் அவர்கள் கட்டிக் கொடுத்த கட்டடத்தில்தான் இந்த ஜமால் முகமது கல்லூரி தொடங்கப்பட்டது!
இரண்டு வள்ளல்களும் உருவாக்கித் தந்திருக்கும் இந்தக் கொடையில், கடந்த 75 ஆண்டுகளில், உங்களுடைய ஆயிரக்கணக்கான Seniors சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள்! அவர்கள் எந்த நோக்கத்தோடு இந்தக் கல்லூரியை உருவாக்கினார்களோ, அதிலிருந்து விலகாமல் இன்றுவரை இது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகக் குழுவினர் – கல்லூரி முதல்வர்கள் – பேராசிரியர்கள் உள்ளிட்ட எல்லோரையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.
அதேபோல, இந்த கல்வி நிறுவனத்திற்கும், அங்கே படிக்கின்ற மாணவர்களால் தான் பேரும் புகழும் கிடைக்கும். உயர்ந்த சிந்தனையாளர்களோடு தொலைநோக்குப் பார்வையை செயல்வடிவமாக்கப் போகின்றவர்கள் மாணவர்களான நீங்கள்தான்!
மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களின் நிலையான சொத்து. அதன், பல்வேறு திறமைகள் கொண்டவர்களாக, தன்னம்பிக்கையும் – சமூக அக்கறையும் நிறைந்தவர்களாக வளர வேண்டும்! வளர்ந்துகொண்டே இருக்கிறீர்கள். அதனால்தான் ஏராளமான Gold Medals இந்தக் கல்லூரியை தேடி வந்து கொண்டிருக்கிறது! தரமான கல்வியைக் கொடுப்பதால்தான், இங்கு நிகழ்த்தப்பட்ட பல ஆய்வுகள் உலகத்தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது!
மாணவர்களின் பல கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைத்திருக்கிறது! இப்படி சாதனைகள் படைப்பதால்தான், 2011 மற்றும் 2016-இல், யு.ஜி.சி, இந்தக் கல்லூரியை “ஆற்றல் வளத் தனித்தகுதி பெற்ற கல்லூரி”-என்று தேர்ந்தெடுத்து, கட்டமைப்பு வசதிகளுக்கு 3 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இவையெல்லாம் கல்லூரி நிர்வாகத்திற்கு மட்டுமல்ல; உங்களுக்கும் பெருமை.
நீங்கள் இரயிலில் - பேருந்தில் அல்லது விமானத்தில் பயணம் செய்யும்போது அருகில் அமர்ந்துள்ளவர் “எந்த College Brother?“ என்று கேட்டால், “ஜமால் முகமது காலேஜ்” என்று நீங்கள் சொல்ல, “நானும் அதே College Student-தான், இப்போது ISRO-வில் இருக்கிறேன்; Secretariat-இல் பெரிய பதவியில் இருக்கிறேன்” என்று சொல்லும்போது ஒரு பெருமிதம் தெரியும் அல்லவா! அதுதான் இந்த கல்லூரியின் கெத்து! Old Student-போல் நாமும் வருவோம் என்று உங்கள் மனதில் உருவாகும் நம்பிக்கைதான் கல்லூரி உங்களுக்கு தரக்கூடிய Confidence Certificate.
உங்களின் முன்னாள் மாணவர்கள் பட்டியலில் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் கூட இருக்கிறார்கள். நம்முடைய தமிழ்நாடு கேபினட்டில் இரண்டு அமைச்சர்கள் உங்கள் கல்லூரியில் படித்து உருவான மாண்புமிகுக்குரியவர்கள்! ஒருவர் மாண்புமிகு கே.என்.நேரு. மற்றொருவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உங்கள் Seniors எங்கள் கேபினட்டிலும் Seniors தான். நாளைக்கு உங்களில் இருந்து சிலர்கூட அந்த பட்டியலில் வரலாம்! வரவேண்டும்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ - நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது! நான் அரசியல் பேசவில்லை! மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்! கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை கொடுத்திருக்கிறது. அப்படி இந்த கல்லூரி கொடுத்த பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்கள், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வழியில் வந்து, சமுதாயத் தொண்டாற்றி இன்றைக்கு தகைசால் தமிழராக நம்மிடையே உயர்ந்து நிற்கிறார்! நல்லிணக்க உள்ளமும், நாட்டு நலன் சார்ந்த நற்சிந்தனையும் கொண்ட அவருக்கு விடுதலை நாளில் (ஆகஸ்ட் 15-ல்) தகைசால் தமிழர் விருதை வழங்குவதில் நானும் – தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறோம்! ஏன் நீங்களும் தான் பெருமையை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.
நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் - தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சிதான் முக்கியம். அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக நாம் நினைப்பது, அறிவுச் செல்வம் தான்! அதனால்தான் கல்விக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு ஏராளமான மாணவர்கள் இருக்கிறீர்கள். நம்முடைய அரசு செய்துகொண்டு இருக்கும் சாதனைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
உங்களின் திறன் மேம்பாட்டுக்கு துணையாக நின்று, இன்றைக்கு பல்வேறு உயர்ந்த பொறுப்புகளில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அமருவதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய திட்டம் தான் “நான் முதல்வன்” திட்டம்!
கல்விக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்று, மாணவ - மாணவிகளுக்குத் துணையாக மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்!
அதுமட்டுமல்ல, கல்லூரிக் கனவு – வெற்றி நிச்சயம் என்று பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்! புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம்! அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இளைஞர்களாகிய நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்! எப்போதும் இளைஞர்களுக்கு துணையாக இருக்கிறோம்!
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் நம்முடைய Motto! இதுதான் திராவிட மாடல்! கடந்தகால படிப்பினைகளின் நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு எதிர்காலம் வளமாக அமைய வேண்டும்! அந்த எதிர்காலம் என்பது நீங்கள்தான்! கல்வி நமக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி, இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சமூகநீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு!
மீண்டும் சொல்கிறேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்களான நீங்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திரள வேண்டும்! நன்றாக படித்து மேலும் மேலும் உயர வேண்டும்! அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணை நிற்பான்! அதேபோல், இசுலாமிய சகோதரர்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் இருக்கும்! இது நான் உங்களுக்குத் தரும் உறுதி!
ஜமால் முகமது கல்லூரியின் கல்விப் பணி நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர வேண்டும், வளர வேண்டும், ஒளிர வேண்டும்! கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அதை மாணவர்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளர்க்கவும், அதற்கேற்ற வசதிகளை வழங்கவும், திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது.
அடுத்து, இளைய சமுதாயத்தை அறிவுச் சமூகமாக வளர்க்க 20 இலட்சம் மாணவர்களுக்கு விரைவில் Laptop தரப் போகிறோம். எங்களின் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜமால் முகமது கல்லூரி போன்ற நிறுவனங்களும் துணையாக இருக்க வேண்டும். நாங்களும் உங்களுக்கு துணைநிற்போம். அனைவருக்கும் நன்றி, என்னை மனதளவில் உங்கள் வயதிலேயே வைத்திருக்க உதவுகின்ற மாணவர்களுக்கு சிறப்பு நன்றி! வணக்கம்! வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!