Tamilnadu
”சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங் அவர்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார், தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.
1969-ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான்.
B.P. மண்டல் தலைமையிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, B.P. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி.சிங் அவர்கள்.
வி.பி. சிங் அவர்கள் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிடுதல் போன்றவற்றை செயல்படுத்திய மாபெரும் சாதனையாளர் ஆவார்.
இந்நிலையில் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
Also Read
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6,000 பேருக்கு கடனுதவி : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
-
வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!
-
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் : நாடாளுமன்றத்தில் கலாநிதி வீரசாமி MP வலியுறுத்தல்!