Tamilnadu

“இந்தியாவிற்கான பொது நுழைவுத் தேர்வு என்பது சாத்தியமற்றது...” - அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!

நேற்று (23.06.2025) உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் சென்னை, குருநானக் கல்லூரியில் நடைபெற்ற 49-வது பட்டமளிப்பு விழாவில் மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :-

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிதடத்தில் அனைவருக்குமான சமூகநீதி ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

சீக்கிய சமயத்தை தோற்றுவித்த குரு நானக் அவர்களின் ஐநூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, குரு நானக் கல்லூரி முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1971-இல் தொடங்கப்பட்டது. 2021-2022 இல் பொன்விழா கண்டது. உயர்கல்வியை வழங்கி வரும் திறன்மிகு கல்வி நிறுவனங்களில் முன்னோடியாகச் தலைநகர் சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கல்லூரியில் அமைந்துள்ள “லங்கர்” (சமபந்தி) எனப்படும் பொதுசமையற்கூடம் வாயிலாக தினசரி 500 மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக அளிக்கப்படுவது பெருமைக்குரியதாகும். 

இக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 7,024 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 2,724 பேர், BC/MBC மாணாக்கர்கள் 718 பேர், SC/ST மாணாக்கர்கள் 846 பேர் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் 275 மாணாக்கர்களும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 247 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆகமொத்தம் 2,086 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

ஒரு சாரார்களுக்கு மட்டுமே உடமையாக இருந்த கல்வியை நீதிக் கட்சியும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கடுமையாகப் போராடிப் பெற்ற சமூகநீதி சார்ந்த ‘இட ஒதுக்கீடு‘ கோட்பாட்டின் வெற்றிதான் இது. இன்றைய தலைமுறையினர் இவற்றை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறையினர் பெறவில்லை என்றால், பல்லாண்டுகள் நாம் போராடிப் பெற்ற வெற்றியைத் தமிழினப் பகைவர்கள் இளங்கலை படிப்பிற்கே கியூட் (CUET) என்ற நுழைவுத் தேர்வுகள் மூலம் பறித்துக் கொண்டு விடுவர்.

பொறியியல் கல்விக்கு நுழைவுத் தேர்வு இருந்த காலத்தில் கிராமப்புற மாணவர்கள் 25 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றனர். ஆனால், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர் கிராமப்புற மாணவர்கள் 77 ஆயிரம் பேராக சேர்க்கை அதிகரித்ததை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

CUET நுழைவுத் தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள் தரத்தை முடிவு செய்வது என்பது முற்றிலும் நயவஞ்சகமானது. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாதபோது இந்தியாவிற்கான பொது நுழைவுத் தேர்வு என்பது சாத்தியமற்றது. நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் வணிக ரீதியாகவே செயல்பட்டு, மாணவர்களிடம் பணத்தை பறிப்பதற்காகவே உள்ளன. புதிய கல்விக் கொள்கை மண்பாண்டம் செய்தல், தச்சு வேலை செய்தல் போன்ற குலத்தொழில்களை கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மூன்மொழிக் கொள்கையே புதிய கல்விக் கொள்கை. தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு முரணானது.

தற்போதுள்ள 10+2+3 என்ற நடைமுறை, மாணவர்கள் எளிதாக பட்டப் படிப்புக்குச் செல்லும் முறை. இந்த கல்வி முறையை மாற்றக் கூடாதென்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். இதை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே இன்று தமிழ்நாடு மட்டும்தான் முன்னணியில் நிற்கிறது. 

நமது முதலமைச்சர் தன்னிகரில்லாத தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வியில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல், போராடி வருகிறார். மாணவர்கள் அரசின் “நான் முதல்வன்” போன்ற இத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'நான் முதல்வன்' திட்டம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும். அதைத்தான் நம் முதல்வர் மாணவர்களிடம் விதைத்திட அறிவுறுத்தியுள்ளார்.

இன்று குருநானக் கல்லூரியில் நடைபெறும் 49-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்புமிக்க இக்கல்வி நிறுவனத்தில் 7024 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இன்று நடைபெறும் விழாவில் 36 மாணாக்கர்களுக்கு பதக்கதுடன் பட்டமும், 610 மாணாக்கர்களுக்கு பட்டமும் வழங்கப்பட உள்ளது.

நீங்கள் இதுவரை ஒரு மாணவர் என்ற நிலையில் படிக்கும் இடம் சார்ந்தும் உங்களின் பெற்றோரைச் சார்ந்தும் நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் இன்றுமுதல் உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனி மனிதராக இந்தச் சமூகம் பார்க்கப்போகின்றது. இந்தச் சமுதாயத்தில் எந்த உயரத்தை எட்ட வேண்டுமோ அதை உங்களின் செயல்களால் நீங்கள் பெற்றுக் கொள்கிற நேரம் வந்துவிட்டது. அதற்கான அடையாளம்தான் இன்று நீங்கள் பெறும் பட்டம்.

நீங்கள் படித்த படிப்பை சரியான சமயத்தில், சரியான முறையில் பயன்படுத்துவதில்தான் உங்கள் வெற்றியும் எதிர்கால இந்தியாவின் வெற்றியும் மனித குலத்தின் வெற்றியும் அமைந்திருக்கின்றது. இன்று நீங்கள் பெறும் பட்டம் உங்கள் வாழ்வில் புதிய வெற்றிகளை முழக்கட்டும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பயணம் செய்யுங்கள். நிறைந்த புகழையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் நீங்கள் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். 

இவ்வாறு, உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Also Read: இனி கும்மிடிபூண்டி, சூலூருபேட்டைக்கு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு !