Tamilnadu

“ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்க பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது : -

இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அரசு திட்டங்கள் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பணிகளை விரைவாக முடிக்க கூறியுள்ளோம்.

புதுக்கோட்டையில் 2015 ஆம் ஆண்டு விளையாட்டு அரங்கம் கட்டத் தொடங்கப்பட்டு அந்த பணிகள் கைவிடப்பட்டது. இதற்கு மேலும் 4.5 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் என்னை அழைத்து இந்த பணிகளை உடனடியாக தொடங்க 3.5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அந்த பணிகள் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து இந்த விளையாட்டு அரங்கம் விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்ட இந்த உள்விளையாட்டு அரங்கம் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது மாநிலத்துக்கு தேவையான நிதியுரிமையை கேட்க நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காகவே இதனையும் விமர்சித்து பேசுகின்றனர்

ED (அமலாக்கத்துறை) மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து உரிமைக்காக குரல் கொடுப்போம். எங்களை மிரட்ட பார்த்தனர். மிரட்டி அடிபணிய திமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை; சுயமரியாதை கட்சி. நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்" என்றார்.

Also Read: தமிழ்நாடு, கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை... 1999 ஆம் ஆண்டுக்கு பின் நடந்த மாற்றம் என்ன ?