Tamilnadu

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு : சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமசந்திரன். தற்போது ஆரணி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அவரது மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். சேவூர் ராமச்சந்திரன் அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 8 கோடி ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் உசிலம்பட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை இருந்த பா.நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டியில் உள்ள பா.நீதிபதியின் வீட்டில், மதுரை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”அரசியல் உள்நோக்கத்தோடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறை” : அமைச்சர் முத்துசாமி கண்டனம்!