Tamilnadu

எலான் மஸ்க் வீடியோக்களை பயன்படுத்தி கிரிப்டோ மோசடி : மக்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலிஸ் எச்சரிக்கை!

எலான் மஸ்க் வீடியோக்களை பயன்படுத்தி கிரிப்டோ நிதி மோசடிகள் நடைபெறுவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சமீபத்தில் சமூக ஊடகங்களில் (உதாரணமாக Instagram) எலான் மஸ்க் (Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி) என்பவர் கிரிப்டோ நாணய முதலீட்டுகளை ஆதரிக்கிறார் என தவறானத் தகவல்களை பரப்பும் போலியான விளம்பர வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த மோசடிகள் பொதுவாக எலான் மஸ்க் அல்லது அவருடைய தந்தை எரோல் மஸ்க் ஆகியோர் அளித்த பேட்டிகளை AI அல்லது எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முறை தவறாக திருத்தி உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற முயற்சிக்கின்றனர்.

சைபர் கிரைம் பிரிவு இதுவரை 26 போலியான Instagram முகவரிகள் மற்றும் 14 போலியான இணையதளங்களை கண்டறிந்து, அவற்றை முடக்குவதற்காக நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

முக்கியமாக, எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டு செயலியை அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்கிறோம்.

போலி மோசடிகளை அடையாளம் காணும் வழிகள்:

* அதிக இலாபம் உறுதி அளிக்கும் வாய்ப்புகள் – நம்பகத்தன்மையற்றவை.

* பிரசித்திபெற்ற நபர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் – தன்னிச்சையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.

* மூலமற்ற இணையதள முகவரிகள், செயலிகள் – பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

மக்களுக்கு அறிவுரை:

* தகவல்களை அரசு அல்லது நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கவும்.

* அறியாத இணையதளங்களுக்கு தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை பகிர வேண்டாம்.

* மட்டும் தான் பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ பரிமாற்றங்களை பயன்படுத்தவும்.

முகாமல் செய்தால் எங்கே புகார் கொடுக்கலாம்?

* சைபர் மோசடிக்குள்ளானவர்கள் 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.

* அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

இது தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வு அறிவிப்பு.

புகாரளித்தல்:

இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-யை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் பதிவு செய்யவும்.

Also Read: ”மாணவர்களின் கல்விக் கனவைக் காவுவாங்கத் துடிக்கும் மோடி” : இரா.ராஜீவ்காந்தி கண்டன அறிக்கை!