Tamilnadu

உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு : மாற்றுத்திறனாளிகளை தலைவர்களாக உயர்த்திய முதலமைச்சர் : The Hindu!

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரலாற்றுத் தவறுகளையும் குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மிகவும் உறுதியான நடவடிக்கை தேவை என்றும், தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான அண்மைக்கால முயற்சி, சமூகத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தங்கள் மூலம் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அமைப்புகளுக்கும் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க ஒரு மசோதா மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமிக்க வகை செய்யும் மசோதா என 2 மசோதாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள இத்தலையங்கம், இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேர், கிராம பஞ்சாயத்துகளில் 12ஆயிரத்து 913 பேர், பஞ்சாயத்து யூனியன்களில் 388 பேர் , மாவட்ட பஞ்சாயத்துகளில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 35 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ளதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள், மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை உறுதி செய்வதோடு, அவர்கள் மீதான பாகுபாட்டைக் களைவதுடன், சமூகத்தின் அடிமட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமவாய்ப்புகளை பயன்படுத்த முடியாதவர்களுக்கும் இயல்பான வாழ்க்கைக்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்துவது அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியம் எனத் தெரிவித்துள்ள இத்தலையங்கம், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்யும் 73வது மற்றும் 74வது அரசியல் சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இதனை 50 சதவீதமாக அதிகரித்ததையும் சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கும் திட்டம், ஓதுக்கப்பட்ட சமூகத்தை சமூகத்தின் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டுவருவதுடன், அவர்களை தலைவர்களாகவும் உயர்த்துவதற்கான நாட்டிலேயே முதல் முயற்சியாகும் என்றும் பாராட்டி உள்ள தி இந்து தலையங்கம், இதன் மூலம் ஒட்டுமொத்த சமுகத்திற்கும் பயனளிக்கும் வகையிலான மாற்றத்தை கொண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read: ஜெகதீப் தன்கர் பேசுவது சட்டப்பூர்வமானது அல்ல : நீதித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது - முரசொலி!