Tamilnadu

”இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க அனைவரும் இணைந்து உறுதியுடன் போராடுவோம்”: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாள் விழா, அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட 75 வது ஆண்டு விழா, எழும்பூர் நீதிமன்றத்தின் 110 வது ஆண்டு விழா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விழாவில் ஆற்றிய உரை:-

இந்த சிறப்புக்குரிய விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை தந்த எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தின் அனைத்து இடங்களிலும் அந்த குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் கடைசி நம்பிக்கையாக இருப்பது நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் மட்டும் தான். அப்படிப்பட்ட அரசியலமைப்பின் மாண்பை நிலைநாட்டுகிற நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களை சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நம் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் அவருடைய புகழை போற்றுகின்றோம். ஆனால், அம்பேத்கர் அவர்களுடைய தொடக்க காலம் எப்படி இருந்தது என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு விஷயம் எழுதப்பட்டிருக்கிறது.

"His note books were not corrected, nor was he asked any questions for fear of causing pollution."

அதாவது, பள்ளியில் படிக்கின்றபொழுது, அம்பேத்கருடைய பாட நோட்டுகளை யாரும் திருத்த முன்வரவில்லை. வகுப்பில் யாருமே அவரிடம் கேள்வி கேட்ககூட முன்வரவில்லை. கேள்வி கேட்பதே அச்சமாக நினைத்தார்கள். காரணம், “தீட்டாகிவிடும் என்கிற அச்சம்" அவர்களுக்கு இருந்தது. இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளான ஒருவர், படிப்பைத் தொடர்வதே மிகப்பெரிய விஷயம், அபூர்வம்.

ஆனால், அம்பேத்கர் அவர்கள், படிப்பைத் தொடர்ந்தது மட்டுமல்ல; நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டத்தையே எழுதுகின்ற அளவுக்கு அவர் படித்தார். ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களுடைய உரிமைக்காக களத்தில் இறங்கி போராடினார். அண்ணலுடைய நோக்கம், சமூக சமத்துவம் Social Equality என்பது மட்டும் தான். சமத்துவத்திற்கு தடையாக இருந்த அனைத்தையும் அவர் ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

ஆகவே தான், அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளை நம்முடைய தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக அறிவித்தது. 3 நாட்களுக்கு முன்பு கூட அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாள் விழாவை, நம்முடைய அரசு சார்பாக, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமத்துவ நாளாக அறிவித்து அதை சிறப்பாக கொண்டாடினோம்.

நீதிக்கட்சி காலம் முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலம் வரை, சட்டத்தின் மூலம் நீதிமன்றங்களின் வாயிலாக ஏராளமான முற்போக்கு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றோம்.

அம்பேத்கர் என்றால், அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமான தலைவர் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீடு, சமூகநீதி கிடைக்கிறது என்றால், அதற்கான கதவுகளை, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், திறந்து வைத்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

இட ஒதுக்கீட்டுக்காக அரசியலமைப்பு சட்டத்தை முதன் முறையாக திருத்த வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடக்கே பிறந்து இருந்தாலும், அண்ணலுடைய கொள்கைகளும் தந்தை பெரியாருடைய கொள்கைகளும், பல இடங்களில் பொருந்திப்போய் உள்ளன.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், சுய மரியாதை திருமணங்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும், அதேபோல் இருமொழிக்கொள்கை பின்பற்றப்படும் என்பது வரை, ஏராளமான சட்டங்களை உருவாக்கினார்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ சட்டப் போராட்டங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார். தன்னுடைய மறைவுக்குப் பிறகும் சட்டப்போராட்டம் நடத்தி தனக்கான இடத்தை பெற்றவர் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அந்த வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான மாண்பமை நீதியரசர் திரு.எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள் இங்கே இருக்கின்றார். அவருக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய உரிமைகளை காப்பற்ற நிலைநாட்டிட சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற மாணவர்களுடைய, பெற்றோர்களுடைய கோரிக்கை எண்ணத்தை நிறைவேற்ற, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு இன்றைக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், மீண்டும், நம்முடைய சட்டப்போராட்டத்தை சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக தொடர்ந்து போராடிக் கொண்டிருகின்றோம்.

அதுமட்டுமல்ல, மருத்துவப்படிப்பில் All India Quota-வில் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சட்டப்போராட்டம் நடத்தி உறுதி செய்தது நம்முடைய அரசு. நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இப்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவும் நம்முடைய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது.

அண்மையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராகவும், நம்முடைய அரசும், கழகமும் வழக்குகளை தொடர்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்த வழக்கில் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இன்றைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நிச்சயமாக இந்த போராட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடருவார்கள்.

மாநில சுயாட்சியை நிலைநாட்ட, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புகின்ற சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கின்ற வேலைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு நம்முடைய நீதித்துறையைத்தான் நம்பிக்கையோடு நாடியிருக்கின்றது.

அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்குமே கொடுத்திருக்கிறது. எனவே, தனிப்பட்ட சாமானிய மக்களுடைய நம்பிக்கையாக மட்டுமல்லாமல், மாநில அரசுகளுடைய நம்பிக்கையாகவும், இன்றைக்கு நீதித்துறை தான் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகவே தான், நீதிமன்றங்களுக்கான தேவைகள், வழக்கறிஞர்கள் நலன், போன்றவற்றிற்காக நம்முடைய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை, ரூ.315 கோடி மதிப்பீட்டில் அமைக்க, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2022-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்கள். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

வழக்கறிஞர் நல நிதியை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களுடைய நலன் காக்கவும், நீதிமன்றங்களுடைய கட்டமைப்பை மேம்படுத்தவும், கழக அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

நீதித்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கென்று தொடர்ந்து இரண்டு கோரிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும்.

இன்னொன்று, உச்ச நீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்பது. இதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு வழக்கறிஞர் அமைப்புகளும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க நாம் தொடர்ந்து அயராது பாடுபடுவோம், உழைப்போம் என்று கூறிக்கொள்கின்றேன். இந்த நேரத்தில் ஒரு கருத்தை நிறைவாக சொல்ல விரும்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி ஆற்றிய உரையை இங்கே குறிப்பிட்டு காட்ட விரும்புகின்றேன்.

"I feel, however good a constitution may be, it is sure to turn out bad because those who are called to work it, happen to be a bad lot. However bad a constitution may be, it may turn out to be good if those who are called to work it, happen to be a good lot."

அதாவது, "அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவோர் கெட்டவர்களாக இருந்துவிட்டால், அரசியலமைப்புச் சட்டமும் கெட்டதாகிவிடும்.

"அதேமாதிரி, ஒரு அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு கெட்டதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவோர் நல்லவர்களாக இருந்தால், அந்த அரசியலமைப்புச் சட்டமும் நல்லதாக மாறிவிடும்," என்று சொன்னார் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதோடு, அது சரியான நபர்களுடைய கரங்களில் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை நாம் பாதுகாத்தால், அந்த அரசியலமைப்புச் சட்டம் நம்மை பாதுகாக்கும், நம்முடைய நாட்டையும் பாதுகாக்கும்.

ஆகவே, அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாள், அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட 75-ஆவது ஆண்டுவிழா, வரலாற்றுச் சிறப்புமிக்க எழும்பூர் நீதிமன்றத்தின் 110-ஆவது ஆண்டு விழா, ஆகியவற்றைக் கொண்டாடும் இந்தவேளையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் – உறுதியுடனும் செயல்படுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை : 210 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு!