Tamilnadu

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ! முழு விவரம் என்ன ?

இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து மனிதன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மனிதன் தன்னை இளைப்பாற்றிக்கொள்ள புத்தகம் முக்கிய இடம் வகிக்கிறது. வேலை பளுவை போக்குவதற்கு சுற்றுலா ஒரு பக்கம் உதவியாக இருந்தால் மறு பக்கம் நல்ல நல்ல புத்தகங்கள் மனிதனை மேலும் உத்வேகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை வாசிகளின் பயண நேரத்தை எளிமையாக்கவும், விரைவாக்கவும் மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் மூலம் தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகளின் வருகையின் போது அவர்களை மேலும் மெருகேற்ற சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரந்தர புத்தக பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ நிலையத்தின் உள்ளே 5,000 சதுர அடி பரப்பளவில் 70 புத்தக அலமாரிகள், ஒரு மினி நிகழ்வு அரங்கம், வசதியான இருக்கைகளுடன் வாசிப்பு அட்டவணைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவை உள்ளடங்கி இந்த புத்தக பூங்கா தயாராகி வருகிறது. இந்த மினி மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசிப்பு அமர்வுகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிற நிகழ்வுகள் நடைபெறும்.

பயணிகள் இந்த பூங்காவிற்கு வருகை தந்து எந்த புத்தகத்தையும் எடுத்து படிக்கலாம். மேலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. புத்தகங்களை பிரபலப்படுத்துவதும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாக இந்த முனைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் காமிக்ஸ், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் பிற வகைகளுக்கும் இந்த பூங்கா முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகம் வருவாய் பகிர்வு அடிப்படையில் புத்தக பூங்காவை இயக்கும். பயணிகள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் மற்ற மெட்ரோ நிலையங்களிலும் இதுபோன்ற புத்தக பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

Also Read: ஆளுநரின் கையெழுத்தில்லாமல் நிறைவேறிய மசோதாக்கள்... மகத்தான சாதனையைச் செய்த முதலமைச்சர் - முரசொலி !