Tamilnadu

வட்டி தள்ளுபடி திட்டம் : சட்டப்பேரவையில் 35 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் முத்துசாமி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1.சுயசான்றிதழ் மூலம் தூண்தளம் மற்றும் இரண்டுதளம் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

2.குடியிருப்பு கட்டடங்களுக்கான நிலையான மனை அளவுகள் கொண்ட மாதிரி கட்டட வரைபடங்கள், முகப்பு தோற்றம் மற்றும் குறுக்கு வெட்டு தோற்ற விவரங்களுடன் பொதுமக்கள் எளிதாக கட்டட அனுமதி பெறும் வகையில் உருவாக்கப்படும்.

3.குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

4. வரிசை வீடுகள் (Row houses) மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு (Group houses) பக்கத்திறவிடம் தளர்வு போன்ற சிறப்பு விதிகள் சேர்க்கப்படும்.

5.20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.

6.நீர்நிலைக்கு அடுத்துள்ள பள்ளி கட்டங்களுக்கு நீர்நிலைப்பக்கத்தில் எந்த திறப்புகளும் இல்லாத வகையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமெனில் பள்ளி கட்டங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

7. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே சேவை சாலை உருவாக்குமெனில், அப்பள்ளி கட்டங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8.உட்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணங்கள், வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்படும்.

9. ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டிற்கு வாகன நிறுத்துமிடத்திற்கென தனி விதிகள் உருவாக்கப்படும்.

10.திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.

11. நகர் ஊரமைப்புத் துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் பதிவுபெற்ற வல்லுநர்கள் நகர் ஊரமைப்பு துறையில் செயல்பட அனுமதிக்கப்படுவர்.

12. நகர் ஊரமைப்பு துறையில் முழுமைத்திட்ட அலகு (தனி பிரிவு) உருவாக்கப்படும்.

13. தமிழ்நாட்டில் முழுமைத்திட்டம் (Master plan) தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்.

14. மலையிட பகுதிகளில் (Hill stations), திட்டஅனுமதி செயல்முறை மற்றும் பிற திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்த, நகர்ப்புற திட்டமிடுபவர்கள்/ பொறியாளர்கள்/ கட்டடக் கலைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

15. மனை மேம்பாட்டுத் திட்டங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 1.97 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

16. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் 1.05 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ.0.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

17. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8.19 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ. 9.13 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

18. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்காக முதற்கட்டமாக 100 வாடகை குடியிருப்புகள் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

19. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 2024க்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் (Hire Purchase Scheme) கீழ் விற்கப்படும்.

20. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், 31.03.2015க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, மாதத் தவணை தொகையினை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

21.சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்.

22.வேலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மண்டலங்களிலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் வணிக வளாகங்களுடன் கூடிய சங்க அலுவலக கட்டிடம் கட்டப்படும்

23. வேலூர் மற்றும் செங்கல்பட்டு மண்டலங்களிலுள்ள 3 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் சிமெண்ட் விற்பனையகம் துவக்கப்படும்

24. செங்கல்பட்டு மண்டலத்திலுள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்படும்

25. சென்னை பெருநகர பகுதியில் ஸ்மார்ட் வாகன நிறுத்த மேலாண்மையை செயல்படுத்தப்படும்.

26. சென்னை பெருநகரப் பகுதிக்கான விரிவான சாலை வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும்.

27.சென்னை பெருநகரப் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும்.

28. சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 134 திட்டப்பகுதிகளில் 62,197 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.170.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

29. பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 8,352 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

30. ஒக்கியம் துரைப்பாக்கம் - எழில் நகர் திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 6,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

31. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்காக 320 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.54.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

32. பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.

33.ஒக்கியம் துரைப்பாக்கம் - கண்ணகி நகர் திட்டப்பகுதியில் ரூ.2.00 கோடி திட்ட மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டிற்காக முதல்வர் திறனகம் அமைக்கப்படும்.

34.வாரிய குடியிருப்புகளிலுள்ள இளம் பெண்களுக்கு ரூ.80.00 இலட்சம் செலவில் நல்வாழ்வு மற்றும் சுகாதார பெட்டிகள் வழங்கப்படும்.

35. பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும்.

Also Read: ”மருத்துவம், கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு” : காலாநிதி வீராசாமி MP பெருமிதம்!