Tamilnadu
“தொழில்முனைவோர்களுக்கு ரூ.5,000 கோடி கடனுதவி!” : சட்டப்பேரவையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 4) பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து உரிமைகளை பெருவதற்காகவும், தடையில்லா சான்றிதழ்களை பெறுவதற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2021ஆம் ஆண்டு ஒற்றை சாளர இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இத்தளத்தின் மூலமாக இதுவரை, 73,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 69,595 உரிமைகள் மற்றும் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்திடும் வகையில், திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 54,000 தொழில் முனைவோர்களுக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் கடனுதவி, ரூ.2,000 கோடிக்கு மேல் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, தொழில் ஆலோசனைகளும் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.
புவிசார் குறியீட்டை பொறுத்தவரை, இது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது.
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப்பழம் - முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பணங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது.
மேலும், செட்டிநாடு கைமுறுக்கு - சீடை, கோவில்பட்டி சீவல், இராமநாதபுரம் பட்டறை கருவாடு - பனங்கற்கண்டு ஆகியவற்றிற்க்கு MSME துறையின் - தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் TNAPEX மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கபட்டுள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும்.
அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தீப்பெட்டிகளின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் MSME துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி - சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் - சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!