Tamilnadu

“7 வேளாண் விரிவாக்க மையங்கள்!” : வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2025-2026 நிதியாண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை சார்பில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு,

1. வேளாண்மை - உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்களையும் ஆலோசனைகளையும், தரமான வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடைய ஏதுவாக ஏழு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 25 கோடியே 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

2. இரசாயன உரங்களின் தரத்தினை ஆய்வு செய்து விவசாயிகளுக்குத் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3. வேளாண் விளைபொருள்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்து சேமிப்புக் காலத்தை நீட்டிக்கும் வகையில் திசையன்விளை, மானாமதுரையில் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

4. தரமான விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு அருகாமையில் கிடைக்கச் செய்யும் வகையில் குறுவட்ட அளவில் செயல்படும் ஐந்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மூன்று கோடியே 58 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.

5. வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்து, வட்டார அளவில் விவசாயிகளுக்கு சேவை வழங்கிட ஏதுவாக வேளாண் இயந்திரக் கூடாரங்கள் 15 வட்டாரங்களில் மூன்று கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

6. தமிழ்நாட்டில் உள்ள 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் அவற்றைக் கண்காணிக்கவும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்கள் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

7. விவசாயிகளுக்குத் தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில், தஞ்சாவூரில் இயங்கிவரும் உயிரியல் பூச்சிக்கொல்லி உற்பத்தி மையத்தில் புதிய கட்டடம் ஒரு கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

8. காய்கறி நாற்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நாற்றங்கால் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.

9. அதிக வரத்துக் காலங்களில் மாம்பழங்கள் வீணாவதைத் தடுத்து, விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏதுவாக, வங்கிக்கடன் உதவியுடன் மாம்பழக் கூழ் தயாரிப்புக் கூடம் அமைக்க எட்டு நபர்களுக்கு தலா ரூ.12.25 இலட்சம் வீதம் மானியம் வழங்க 98 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

10. விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று மண் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அட்டைகளுடன், பயிர்களுக்கேற்ப உரப்பரிந்துரைகள் வழங்கும் வகையில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நடமாடும் மண்பரிசோதனை நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

11. சிறு, குறு விவசாயிகளின் சிறிய இயந்திரங்களுக்கான தேவையினைக் கருத்தில் கொண்டு, புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை அரசு இயந்திரக் கலப்பை பணிமனைகளில் உருவாக்கி, அவை குறித்து விவசாயிகளுக்குச் செயல் விளக்கங்கள் அளிக்கப்படும். இதற்கென 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

12. விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க ஏதுவாக, சேலத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வளாகத்தில் புதிய வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

13. சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகியவற்றின் விற்பனை, ஏற்றுமதியை அதிகரித்திட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பான பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்புக் கூட்டம் நடத்தப்படும்.

14. விவசாயிகளுக்குத் தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும்.

15. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்து 1,000 விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்படும்.

16. மா மரங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, மா விவசாயிகள் பயன்பெறும் வகையில், மா மரங்களில் கவாத்து செய்வது குறித்த செயல்விளக்க விழிப்புணர்வுப் பயிற்சி 500 விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

17. தோட்டக்கலைப்பயிர்கள், மலைப்பயிர்களில் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

18. உழவர்கள், கிராமப்புர இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 1,000 நபர்கள் பயன்பெறும் வகையில் வேளாண்பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திரம் இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

19. சென்னை மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில் தொழில் முனைவோர் வாய்ப்புகளுக்கான வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்து 500 படித்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

20. வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

21. புதியதாகக் கண்டுபிடிக்கப்படும் நவீன வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்திட 50 செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்படும்.

22. 1,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நுண்ணீர்ப் பாசன அமைப்புகளின் பராமரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கூடுதலாக,

1. பெஞ்சல் புயலில் சேதமடைந்த விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு உழவர் ஓய்வுக்கூடம் மற்றும் சுற்றுச் சுவர் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும்.

2. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ரூ.80 இலட்சம் செலவில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.

3. தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்த கொள்கையானது உழவர் பெருமக்களுக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும் உதவும் வகையிலும், சிறு மற்றும் குறு உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கவும், விவசாயப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இக்கொள்கையில் வழிவகை செய்யப்படும்.

4. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நாயுடுமங்கலம் ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

Also Read: கார்ல் மார்க்ஸ், மூக்கையா தேவருக்கு மரியாதை - பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் அறிவித்தது என்ன?