Tamilnadu

நான் CBSE பள்ளி நடத்துகிறேனா? : அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த தொல்.திருமாவளவன்!

நான் CBSE பள்ளி எதுவும் நடத்தவில்லை. எனது இடத்தில் ஒருவர் நடத்த உள்ளார். எனது இடத்தில் நடத்தப்படுவதால் எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன்,”ஒரே தேசம், ஒரே மொழி என்கிற நிலைப்பாட்டை எடுத்து ஒரு மொழியை அரசு திணிக்கப் பார்க்கிறது. பல மொழிகள் பேசக்கூடிய தேசிய இனங்கள் உள்ளன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் இந்தியாவில் ஒரே மொழியாக இந்தியை பேச வைக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் நோக்கம். இந்தியை ஒற்றை மொழியாக்க வேண்டும் என்பதை பா.ஜ.க அரசின் நிலைப்பாடு. இந்த திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தி பேச வற்புறுத்துவது ஏன்?.

தமிழ் பிராந்திய மொழி எனக் கூறப்படுகிறது. அப்போ இந்தி பிராந்திய மொழியில்லையா? இந்தியும் பிராந்திய மொழிதான். தேசிய மொழியாக 20-க்கும் மேற்பட்டவை இருக்கும் போது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அதிகளவிம் நிதி ஒதுக்கி கொள்கை கோட்பாடா முன்னிறுத்தப்படுகிறது. தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுவது வேறு, அரசே கொள்கையாக இந்தியை திணிப்பது வேறு அத்தகைய கொள்கைத் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்.

நான் CBSE பள்ளி எதுவும் நடத்தவில்லை. எனது இடத்தில் ஒருவர் நடத்த உள்ளார். அதற்கான பெயர் மட்டும்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனது இடத்தில் நடத்தப்படுவதால் எனது பெயரை பயன்படுத்தி உள்ளனர். அண்ணாமலை பரபரப்புக்காகவும் ஊடக கவன ஈர்ப்புக்காகவும் தினமும் பேசி வருகிறார். நாகரீக அணுகுமுறையுடன் அண்ணாமலை பேசுவதில்லை. யாரையும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற வகையில் பேசுகிறார். எனக்கு இரட்டைவேடம் போட வேண்டிய தேவை இல்லை” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”அண்ணாமலை அவர்களே முதலில் இதை Google-ல் செய்து பாருங்கள்” : தமிழன் பிரசன்னா சொல்வது என்ன?