Tamilnadu
”கல்வியைப் புறந்தள்ளிவிட்டு காவியைப் புகுத்தும் பாசிச பாஜக அரசு” : சி.வி.எம்.பி.எழிலரசன் கடும் கண்டனம்!
கல்வியைப் புறந்தள்ளிவிட்டு காவியைப் புகுத்தும் பாசிச பாஜக அரசு என திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சமத்துவம், சமதர்மம், சமூகநீதி, மதச்சார்பின்மையை உள்ளடக்கிய திராவிட பண்பாட்டிற்கு நேர் எதிரானது ஆரியப் பண்பாடு. இதை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் மொழியியல் வல்லுனர்களும் நிறுவியுள்ளனர். அதுபோலத் தான் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது ஒன்றிய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் 'காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்' என்ற முழக்கத்துடன் கடந்த 2022 ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பா.ஜ.க அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிற்கும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய (இந்து) கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
மும்முமொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முனைவது, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரத்தை விவரிக்கும் கருத்துப்படங்களும், அறிவியலுக்கு மாறான புராண இதிகாச கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களை திணிப்பது, உயர் கல்விக்கான நிதியை குறைப்பது-தடுப்பது, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து மாணவர்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாத வகையில் இடைநிற்றலை உருவாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கும் வாய்ப்பை சிதைப்பது என அனைத்திற்கும் ஊற்றாக விளங்கும் சமூகநீதி, சமத்துவம், சம வாய்ப்புக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை 2020யை நடைமுறைபடுத்த மாநிலங்களை அப்பட்டமாக அச்சுறுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ.2,152 கோடியை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்திருப்பது இதுவரை இந்திய வரலாற்றில் எந்த ஒன்றிய அரசும் மாநிலங்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவிற்கு இரக்கமில்லாமல் நடந்துக் கொள்ளவில்லை என கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது 'காசி தமிழ்ச் சங்கமம்' என்ற பெயரில் ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள ஒன்றிய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. இதை தந்தை பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டே பின்வருமாறு விவரிக்கிறார், “மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில் அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமறித்து கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண்டிருக்கின்றது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய் விடுகின்றது.”
பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் திராவிட மாடல் நாயகன், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்திற்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளந்தலைவர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்துளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!