Tamilnadu

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் : அது என்ன?

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் இவ்விழாவில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1•நெல்லை சீமைக்கான முதல் அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

2• திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் இரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய Y வடிவ இரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3• திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்களுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும்.

4• பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

5• அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

6• மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

Also Read: "தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!