Tamilnadu

முதலில் இதை படியுங்கள் ஆர்.என்.ரவி : ஆளுநருக்கு பாடம் எடுத்த முரசொலி!

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஓரவஞ்சனை காட்டும் ஒன்றிய அரசானது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பாராட்டுதல்களை

மட்டும் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்குகிறது. அதை அவர்களால் மறைக்க முடியவில்லை. ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் “திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளுக்கு மாபெரும் பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் கடந்த 31.1.2025 அன்று 2824- 25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு சாதனைகளுக்கு பாராட்டுதல்கள் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் தோல்பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல்பொருள்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது என்று இந்த அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய காலணி உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கும், கிராமப்புறங்களில் தொழிற் பேட்டைகளை உருவாக்கவும் எடுத்துள்ள முயற்சிகளை இந்த ஆய்வு எடுத்துக் காட்டியுள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்பை வளர்த்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்து உள்ளது. கொரோனா- -19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், மாணவர்கள் கணிதம் மற்றும் மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கல்வித் துறையால் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்கள் ஆகும்.

அனைவர்க்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு, கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி, குறைபாடு ஏற்பட்டதை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்டதுதான் ‘இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் ஆகும். 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். இத்திட்டத்துக்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 80,138 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டன. அனைவரையும் பள்ளிகளை நோக்கி வரவைக்கும் கல்வியில் சிறந்த திட்டமாக இது தொடங்கப்பட்டது. அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியும் காட்டியது இத்திட்டம்.

புதிய செயலி மூலமாக பள்ளி செல்லாத 1,88,487 குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய வகுப்பில் சேர்த்து பயிற்சிகள் தரப்பட்டது. பள்ளி களில் பயிலும் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் ஆளுநராக உட்கார்ந்து கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி இங்கு செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்குப் பதிலடி தரும் வகையில் இந்த அறிக்கையானது அமைந்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டுப் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லி வருகிறார் ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டுக்குள் வந்து எதற்காகத் தொழில் தொடங்குகிறீர்கள்? வெளி மாநிலத்துக்குப் போங்கள், வேறு மாநிலத்துக்குப் போங்கள்' என்ற கெட்ட எண்ணத்தோடு அவர் சொல்வதாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். அவர் சொல்வது போல யாரும் போகவில்லை. பல்வேறு நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த ஆய்வறிக்கையை முதலில் படிக்க வேண்டியது ஆர்.என்.ரவிதான்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் தலைவர் மற்றும் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு அறிக்கையைத் தந்தார்கள்.

“தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.98 சதவிகிதம் முதல் 10.69 சதவிகிதம் வரை உயரும். இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நிகழ்ந்து வரு கிறது. இரட்டை இலக்கை அடைவதற்கான திறன் தமிழ்நாட்டுக்கு உள்ளது. 2821 முதல் 23 வரை மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித மாக இருந்தது. இது அடுத்தடுத்து வரும் காலங்களில் 10 சதவிகிதத்தை அடையும். தமிழ்நாடு அரசின் பல்வேறு செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகள் வளர்ச்சியின் வேகத்தையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். அத்தகைய வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சென்று கொண்டிருப்பதை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை முதலில் படிக்க வேண்டியது ஆர்.என்.ரவிதான்.

Also Read: "இதற்கு எதற்கு ஒன்றிய நிதியமைச்சர்?" : முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!