Tamilnadu
”சர்வாதிகார போக்குடன் செயல்படும் UGC” : அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள யுஜிசி-2025 வரைவு திருத்த நெறிமுறைகளை கைவிட வேண்டும். யுஜிசியின் திருத்த அறிக்கையை அமல்படுத்த கூடாது. திரும்ப பெற வேண்டும். அடிப்படை கல்வி முதல் உயர்க்கல்வி வரை ஒன்றிய அரசு பல்வேறு இடர்பாடுகளை செய்து வருகிறது.
இந்தியாவில் கல்வியை அந்தந்த மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் வகையில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் உள்ளது. பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. மூலம் கைப்பற்ற ஒன்றிய அரசு நினைக்கிறது.
துணைவேந்தர் நியமனத்தில் இதுவரை உள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் அதிலும் யு.ஜி.சி. தலையிட்டுள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் துணைவேந்தரை நியமிக்கும் முடிவு தவறானது. யு.ஜி.சி. ஒன்றிய அரசின் கைப்பாவையாக உள்ளது.
கல்வித்துறை சாராத நபர்கள் துணை வேந்தர் பதவிக்கு வரலாம் என்பது முற்றிலும் தவறானது. இது பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை. அதே நேரத்தில் டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையது அல்ல. தொழில் கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறி படிக்கலாம் என்பது தவறானது. ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பது கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்க்கல்வியில் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளது.உயர்க்கல்வியில் இந்தியா 28% உள்ளது. ஆனால் தமிழ்நாடு 48%. புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் பட்டங்கள் செல்லாது. அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தமிழக உயர்க்கல்வித்துறை கலந்து கொள்ள முடியாது என மிரட்டி சர்வாதிகார போக்குடன் யு.ஜி.சி நடந்து கொள்கிறது. யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை தமிழ்நாடு போன்று கேரளா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் எதிர்த்துள்ளது.
இதனை கடைசி வரை நாங்கள் எதிர்த்து போராடுவோம்.5-2-2025 தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாநில கல்விக்கொள்கை திட்டப்படி அனைவரும் இதனை எதிர்த்து மெயில் அனுப்ப உள்ளோம். துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவது யார் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆளுநருடைய நெறிமுறைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு எல்லை உண்டு அதைத்தாண்டி கல்வித்துறையை சீரழிக்க நினைத்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!