Tamilnadu

11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் 424 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் 231 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 133 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரும் வருமாறு:-

1.சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்கவேண்டும் என்று செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி உழவர் பெருமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 304 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. விழுப்புரம் வட்டத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேதம் அடைந்த, தளவானூர் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

3.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

4. காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

5.விக்கிரவாண்டி பேரூராட்சியில் இருக்கும் கக்கன் நகரில், ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில், பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும்.

6. செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

7.திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம், சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.

8.விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலாமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

9.விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், டவுன் ஹால்-ஆக மாற்றப்படும்.

10.தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

11. வீடூர் அணையிலிருந்து மயிலம், பாதிரப்புலியூர் வழியாகச் செல்லும் 15 கிலோ மீட்டர் சாலை 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Also Read: சமூகநீதிக்கான இயக்கம் தி.மு.க.வின் முதன்மை இலக்கு மக்கள் குறையை நீக்குவதே! : முதலமைச்சர் பேருரை!