Tamilnadu
“22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும்” - ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!
டெல்டா மாவட்டங்களில் 17% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்படுவதை தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்தால் டெல்ட்டா விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி 2022– 2023 காரிஃப் சந்தைப் பருவத்திலிருந்து செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
01.09.2024 முதல் 17.01.2025 வரை 1349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80,634 விவசாயிகளிடமிருந்து 5,72,464 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,378 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளது தேதி வரை ஒன்றிய அரசு அனுமதித்துள்ள 17% ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்ட்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாலும் வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் விவசாயிகள் நெல்லினை உலரவைக்கச் சிரமப்படுவதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !