Tamilnadu

“எடப்பாடிக்கு குறை கூற எவ்வித உரிமையும் இல்லை!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் துறையின் முன்னெடுப்புகளால் பல்வேறு கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனினும், நெடுஞ்சாலை குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், “திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், 328 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி ஆட்சியில் முடிக்காமல் விட்டு சென்ற, நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த 38 ரயில்வே மேம்பாலங்கள் திராவிட மாடல் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.

எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு, கட்டும் போதே இடிந்த கடலூர் சிங்காரதோப்பு பாலமும் உண்டு, விழுப்புரம் தளவானூர் தடுப்பணையும் இடிந்து விழுந்தது உண்டு. உதாரணத்திற்கு, என்னுடைய மாவட்டத்திலேயே அம்மாபாளையத்தில் - நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும், படவேடு - இராமர் கோயில் சாலையில் கமண்டலநதி மேல் கட்டப்பட்ட பாலமும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை எங்கள் மாவட்ட மக்கள் மறவமாட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் மறந்து எதிர்கட்சி தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார். உண்மை நிலை என்ன?

ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் பெய்த அதீத கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 1,75,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடர் மழையினால் கீழ்பகுதியில் பாம்பாறு, வரட்டாறு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், மற்றும் குளங்களிள் நிரம்பி உபரிநீரும் மொத்தம் சேர்ந்து இப்பாலத்தில் வெளியேறிய அதிகப்படியான வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்தது. இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 54,000 கன அடி தான், “எதிர்பாராத பேரிடர்” காரணமாக அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாக கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுபாடு பொறியாளர்கள் தரத்தினை சோதிக்கின்றனர். முதலமைச்சராக, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த எடப்பாடியாருக்கு இந்த ஆட்சியினை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை” தெரிவித்துள்ளார்.

Also Read: “ஏற்பட்ட இரு பேரிடர்களுக்கே நிவாரண நிதி தரவில்லை - இதோ! மூன்றாவது பேரிடரும் வந்து விட்டது!” - முரசொலி!