Tamilnadu
“டங்ஸ்டன் சுரங்கம் : தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் திட்டவட்டம்!
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு (28-11-2024) அன்று கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள அக்கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை இரத்து செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சர் அவர்களின் 3-10-2023ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே ஒன்றிய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார் என முதலமைச்சர், தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 7-11-2024 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக ஒன்றிய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மேற்படி டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலமாகும்.
இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது என்றும் குறிப்பிட்டு, இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!
-
தவெக நிர்வாகி வீட்டில் ரெய்டு; 135 KG போதைப்பொருள் பறிமுதல்: சிக்கப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?
-
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!