Tamilnadu
2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ! : அக்டோபர் 26ஆம் நாள் சோதனை ஓட்டம்!
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும்(45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும்(44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயிலை பயன்படுத்துவதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ. 1,215.92 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ஆம் நாள் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் 26ம் நாள் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !