Tamilnadu

வழக்காடு மொழி விவகாரம் : “தமிழுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?” - கி.வீரமணி !

உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வழக்காடும் உரிமை தேவை என்ற அடிப்படையில், நமது வழக்குரைஞர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையின் விவரம் வருமாறு :

உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வழக்காடும் உரிமை தேவை என்ற அடிப்படையில், நமது வழக்குரைஞர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை கடந்த எட்டு நாட்களாக நடத்தி வருகின்றனர்! தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம், நமது நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்று போராடும் நிலையே வெட்கக் கேடானது என்றாலும் இது காலத்தின் கட்டாயம்.

இது இன்று, நேற்று நடக்கும் போராட்டமல்ல; 1956 ஆம் ஆண்டிலேயே (செப்டம்பர் ஒன்று) ‘விடுதலை' ஏடு ‘‘நீதிமன்றத்திலும் தமிழ்'' என்று வலியுறுத்தி தலையங்கம் தீட்டியதுண்டு. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், 6-12-2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் எல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில், தமிழுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன் என்பது நியாயமான கேள்வியாகும்.

நமது வழக்குரைஞர்கள் இந்த உரிமையை வலியுறுத்தி, ‘‘சாகும்வரை பட்டினிப் போராட்டம்'' நடத்தும் நிலையில், நமது முதலமைச்சர் சார்பில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் வழக்குரைஞர் தோழர்களை நேரில் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்ற முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை மேற்கொள்ளும் நமது வழக்குரைஞர் தோழர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வழக்குரைஞர்கள் உயிர்களும் முக்கியம் அல்லவா?