Tamilnadu

முதல் முறை... இரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்ட திருநங்கை: குவியும் வாழ்த்து -யார் இந்த சிந்து?

ஆரம்பகாலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பல இடங்களில் மதிக்கப்படாமல் இருந்தனர். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கலைஞர் ஆட்சியில் திமுக அரசு மிகவும் முனைப்பு காட்டியது. அதைத்தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களை 'திருநங்கை' என்று அழைக்க வேண்டும் என்று கலைஞர் ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போதில் இருந்தே திருநங்கை, திருநம்பிகளுக்கு திராவிட கழக ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனாலே அவர்கள் மீது இந்த சமூகம் வைத்திருக்கும் பார்வை மாறுபட தொடங்கியுள்ளது. தற்போது திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். இதற்கு வித்திட்டது திமுக அரசு என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து திருநங்கைகள் நலனுக்காகவும் திமுக அரசு பல முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருவதன் எதிரொலியாக திருநங்கைகள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை ஒருவர் இரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் சிந்து. திருநங்கையான இவர், பி.லிட் தமிழ் இலக்கியம் முடித்துள்ளார். கடந்த்19 ஆண்டுகளுக்க் முன்னர் இரயில்வே துறையில் பணிக்கு சேர்ந்த இவர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரயில்வே பணியில் சேர்ந்தார்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லுக்கு மாறுதலாக மின்சார இரயிலில் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் இவருக்கு திடீரென எதிர்ப்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டதால் கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கே இருந்துகொண்டே வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த இவர், டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்துள்ளார்.

திருநங்கை சிந்து

இந்த நிலையில் தற்போது இவர் திண்டுக்கல் இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநங்கை சிந்துவுக்கு இரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிறசங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தெற்கு இரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை பெற்றுள்ள சிந்துவுக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து சிந்து கூறுகையில், “இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கையாக பிறந்து விட்டோம், என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடாமல், மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லோர் வாழ்விலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது.

எனவே திருநங்கைகள் தங்களுக்குதான் பிரச்னை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும்” என்றார். திருநங்கை சிந்துவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.