Tamilnadu

"பதிப்பாளராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்"- சென்னை புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய இந்த புத்தகக் காட்சி, வரும் 21 ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடியோடு புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலிமுத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சி நமது முதலமைச்சர் கலந்து கொண்டு திறப்பதாக இருந்தது. அவர் இன்று கலந்து கொள்ளவில்லை என்றாலும் முதலமைச்சர் அவர்களின் நினைப்பு முழுவதும் இந்த நிகழ்ச்சியில் தான் கண்டிப்பாக இருக்கும்.

இந்த புத்தக கண்காட்சியில் பல ஆண்டுகளாக நான் கலந்து கொண்டு இருக்கிறேன், பல புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன், முதல்முறையாக இந்த புத்தகக் காட்சிகளை திறப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.இந்த முறை சிறப்பு விருந்தினராக மட்டும் நான் கலந்து கொள்ளவில்லை, நானும் ஒரு பதிப்பாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்...

முத்தமிழறிஞர் பதிப்பகத்திற்கு நீங்கள் அனைவரும் சென்று புத்தகங்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாக செல்ல வேண்டும்.கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடக்க உள்ள நிலையில் அதற்கு முறையாக அழைப்பு கொடுப்பதற்காக தான் நான் டெல்லிக்கு செல்கிறேன், கண்டிப்பாக நிதியையும் கேட்பேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கிய விவகாரம் : மாஜிஸ்ட்ரேட் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!