Tamilnadu

சிவாஜி TO கமல்... யாரும் பிடிக்காத இடத்தை பிடித்த விஜயகாந்த் : 100-வது படத்தில் கிடைத்த 'கேப்டன்' பட்டம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். 1979-ல் திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அப்போதுள்ள முன்னணி நடிகைகள், ரேவதி, ராதா, ராதிகா பானு பிரியா, சுகன்யா, சிம்ரன் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களை இவர் ஹிட் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தையும் பிடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதுள்ள பெரிய நடிகர்களுடனே போட்டி போடும் அளவுக்கு இவரது வளர்ச்சி இருந்தது. முக்கிய நடிகர்களுடன் இவரும் ஒருவராக இருந்தபோதும் கூட, ஒரு சில படங்களே தோல்வியை சந்தித்தது. எனினும் இவர்கள் யாரும் பிடிக்காத ஒரு சாதனையைதான் விஜயகாந்த் பிடித்தார். அதுதான் அவரது 100-வது படத்தின் வெற்றி.

பொதுவாகவே திரை பிரபலங்களின் 100-வது படம் வெற்றி பெறுவது என்பது மிகவும் அரிது. அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட விதிவிலக்கில்லை. இவ்ரகள் நடிகைப்பில் வெளியான இவர்களது 100-வது படங்கள் வசூல் ரீதியாக சரிவையே சந்தித்தது.

புரட்சி தலைவர் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளி விளக்கு'. ஜெயலலிதா, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் அப்போது ஒரு பெரிய வெற்றி படம் என்றே கூறினாலும், வசூல் ரீதியாக சற்று சரிவையே சந்தித்தது. அதே போல நடிகர் திலகம் என்ற பட்டத்தை கொண்ட சிவாஜி கணேசனின் 100-வது படம் 'நவராத்திரி'. 9 கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன் நடித்திருக்கும் இந்த படம் விமர்சன ரீதியாக ஒரு பெயரை கொடுத்தாலும் வணிக ரீதியாக சற்று சரிவையே சந்தித்தது.

தொடர்ந்து ரஜினிகாந்தின் 100-வது படமான 'ஸ்ரீ ராகவேந்தரா' அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய தோல்வி என்றே கூறலாம். மேலும் கமல்ஹாசனின் 100-வது படமான 'ராஜபார்வையும்' வசூல் ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது. இவர்கள் மட்டுமின்றி அப்போது போட்டியாளராக இருந்த பிரபு, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் 100-வது படம் வசூல் ரீதியாக சரிவையும், தோல்வியையும் சந்தித்தது.

ஆனால் விஜயகாந்தின் 100-வது படம், தமிழ் திரையுலகில் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக மட்டுமல்லாமல் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'கேப்டன் பிரபாகரன்'. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

ஓப்பனிங் பாடல் இல்லாமல், ஹீரோவுக்கு என்று தனியாக பெரிய பில்டப் இல்லாமல் சில புது விஷயங்களை கொடுத்திருக்கும் இந்த படமானது திரையரங்குகளில் சுமார் 275 நாட்களையும் கடந்து வெற்றிநடை போட்டது. இந்த படத்தின் வாயிலாகவே விஜயகாந்த் 'கேப்டன்' என்ற ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

திரை உலகில் இருந்தபோதே அரசியலில் களம் கண்டார். தொடர்ந்து தனக்கென தேமுதிக என்ற தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து இவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். தொடர்ந்து அடிக்கடி இவரது உடல்நிலை சரியில்லாமல் போனது.

2020-ம் ஆண்டு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு அதில் இருந்தும் மீண்டு வந்தார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 2 வாரங்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து இன்று காலை காலமானார். இதையடுத்து மறைந்த விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை இவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.