Tamilnadu

எண்ணெய் கசிவால் பாய்லர் வெடித்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு... நிவாரணம் அறிவித்த Indian Oil நிறுவனம்!

இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் எண்ணெய், பெட்ரோலியம் உள்ளிட்டவைகள் டேங்கர் லாரிகள் மூலம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த சூழலில் இன்று பெட்ரோலியம் பிரித்தெடுக்கும் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பாய்லர் எதிர்பாராத விதமாக சட்டென்று வெடித்த சிதறியது. இந்த விபத்தில் அங்கிருந்த ஊழியர்களில் 4 பேருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயமடைந்தவர்களை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே 4 பேரில் சரவணன் மற்றும் பெருமாள் (52) ஆகிய 2 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இரங்கல் தெரிவித்ததோடு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதோடு தங்கள் அதிகாரிகள் இந்த நிகழ்வு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.