Tamilnadu

”ஆவின் பால் விலை உயர்வு என்பது கற்பனை” : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் ஆவின் நல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 மாதத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எங்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லையோ அங்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆவின் நிறுவனம் லாபகரமான நிறுவனமாக மாற இருக்கிறது.

ஆவின் நிறுவனத்திற்கு மிக தரமான பால் தரக் கூடியவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது கற்பனை. இது குறித்து தவறான செய்தி பரப்பப்படுகிறது. சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும் போது ஆவின் பாலின் விலை குறைவுதான்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்”.. காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!