Tamilnadu

"திராவிட மாடல் : சனாதனத்தின் பல்லைப்பிடுங்கும் ஆயுதம்.." - தினமலருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் !

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகள் கூடு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் இன்று தினமலர் நாளிதழ் ஈரோடு - சேலம் பதிப்பில் தனது தலைப்பு செய்தியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பு செய்திகள் வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு தற்போது தமிழ்நாடு மக்களிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. முன்னதாக தமிழ்நாடு மக்களின் நலனுக்காக திமுக அரசு கொண்டு வரும் அநேக திட்டங்களை தினமலர் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் தற்போது குழந்தைகள் நலனுக்காக உணவு விஷயத்தில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இதனால் தினமலருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.. கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஎம் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில், "சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்... என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும். பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரியஆயுதம் கல்வி. கற்போம். கற்பிப்போம்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி, "நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது. நமக்கும் சனாதன ஒட்டுண்ணிகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்றுப்போருக்கு நம் ஆயுதத்தைக் கூர்தீட்டுவோம்." என்று குறிப்பிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, "காலம் காலமாகப் படிக்கக் கூடாது என்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகள் படிக்கிறார்கள், அவர்களுக்கு அரசு அனைத்து வகையான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறது. மதிய உணவுடன் காலை உணவையும் வழங்குகிறது - பசிப்பிணி போக்குகிறது என்றதும் பொறுக்கமுடியவில்லை அவர்களால்!" என்று அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரும் திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்று கலைஞரின் வசனத்தை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த செய்திக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தும், நெட்டிசன்கள் மத்தியில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, "சமூக நீதிக்கு எதிரான ஆணவ ஆதிக்க ஆரிய சனாதன மனப்பான்மை தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தினமலரின் திமிருக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பள்ளிக் குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை இழிவு படுத்திய தினமலர் நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: தினமலர் நாளிதழை கொளுத்திய மாணவர்கள்.. - காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கு குவியும் கண்டனம் !