Tamilnadu
நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள்: 24 மணி நேரத்திற்குள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதல்வர்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (24-7-2023) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25-7-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு, இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது IND-TN11-MM-837, IND-TN11-MM-257 பதிவு எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!