Tamilnadu

ரவீந்திரநாத் வெற்றி செல்லாது.. மக்களவையில் இருந்த ஒரு எம்.பி பதவியையும் இழந்தது அ.தி.மு.க - முழு விவரம்!

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆவார்.அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டிருந்தனர்.

இதனிடையே இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், அதிகார துஷ்பிரயோகம், வங்கிகளில் பெற்ற 10 கோடி ரூபாய் கடனை மறைத்து பொய்யான தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துவிட்டார். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆதாரத்துடன் மிலானி தாக்கல் செய்திருந்தார். ஓ.பி.ரவீந்திரநாத் மீதான பணப்பட்டுவாடா புகாரை தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு நடைபெற்று வந்தது. வழக்கில் தங்க தமிழ்ச்செல்வன் ஆஜராகி தன்னுடைய விரிவான பதில் மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே 3 நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தாங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும். எனவே வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேல்முறையீடு செய்வதற்காக வசதியாக உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பின் மூலம் மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை உருவாகி உள்ளது.

Also Read: "ஓட்டுக்கு பணம் கொடுத்து வென்றார் ரவீந்திரநாத்" - குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!