Tamilnadu
சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி : அரிசிக்கொம்பன் யானையால் விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. வனத்துறை அறிவிப்பு !
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்காணலில் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து இடம் பெயர்ந்த அரிசிக்கொம்பன் யானை அருகில் உள்ள தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராம மக்களும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதோடு அரசுப் பேருந்துகள் தவிர்த்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் உள்ளூர் மக்கள் மலைச் சாலையில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் மேகமலை வனப்பகுதிகளில் இருந்து தரையிறங்கிய அரிசிக்கொம்பன் கடந்த மே 27 ஆம் தேதியன்று கம்பம் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்தது இராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையை ஒட்டிய வனப்பகுதிகளில் நடமாடியது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக சண்முகா நதி அணைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஜூன் 5 ஆம் தேதியன்று வனத்துறையினர் பிடித்தனர்.
சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் வன பெருமாள் கோயில் ஒட்டிய வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானையை அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது மேகமலை காட்டு பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை பிரச்னை இல்லை.
எனவே மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் தற்போது விலக்கிக் கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வழக்கம் போல மேகமலைக்கு சுற்றுலா செல்லலாம் எனவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அனைவரும் எப்போதும் போல மலைச் சாலையில் பயணிக்கலாம் என சின்னமனூர் கிழக்கு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !