Tamilnadu

9 லட்சம் மாணவர்கள் பாதிப்பு.. பட்டமளிப்பு விழா நடக்காமல் இருக்க இதுதான் காரணம்: அமைச்சர் பொன்முடி பேட்டி!

ஒன்றிய அமைச்சர்களை அழைத்துப் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். இதனால்தான் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதமாகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடியே 87 லட்சத்து 693 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இது கடந்த ஆண்டைவித அதிகம்.

அதேபோல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட 7852 விண்ணப்பங்கள் அதிகம் வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் கடந்த 2 ஆண்டு காலமாகப் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள் பட்டமளிப்பு விழா சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் தேதி கொடுக்காமல் இருப்பதால்தான் தாமதம் ஏற்படுகிறது. மேலும் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் வட இந்தியப் பிரபலங்களைப் பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து வர வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். இதனால் தான் பட்டமளிப்பு விழா நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வித் தரத்தில் ஆளுநர் அரசியல் செய்கிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: #FactCheck: ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு.. வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்ட பாஜக பிரமுகர் கைது !