Tamilnadu

56 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய பெண்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

மேலும் மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% தேர்ச்சி. மாணவிகள் 94.66% தேர்ச்சி. அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம் (97.53% தேர்ச்சி). விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடம் (96.2% தேர்ச்சி) பிடித்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வராகத் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றுள்ள 56 வயதில் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனம்.

இவர் 1980ம் ஆண்டு 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் அவருக்குத் திருமணம் நடைபெற்றதால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. இதையடுத்து கணவன், மகன்கள், பேரன் பேத்திகள் என குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் அவருக்கு யோகா கலை மீது ஆர்வம் வந்துள்ளது. இதனால் பள்ளிப் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளார். இதையடுத்து தனித் தேர்வராக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடிவு செய்துள்ளார். இதன்படி இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளார்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தனம் 247 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தனம் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார். மேலும் தேர்ச்சி பெற்ற தனத்திற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாகவும் தனம் இன்று மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.39% தேர்ச்சி: முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள் எவை?