Tamilnadu

வீட்டு வேலையில் சேர்ந்த 3-வது நாளில் 207 சவரன் நகைகளை திருடிசென்று மாயமான பெண்.. சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவர் தனது பெற்றோருடன் சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நீதிபதியின் தந்தை மதுரகவி, தங்களது வீட்டிலிருந்த 207 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.5 லட்சம் காணாமல் போய் உள்ளதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நீதிபதி தமிழ்ச்செல்வியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக் கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் தேவி என்பவர் பணியமர்த்தப்பட்டதும், பிறகு வேலையில் சேர்த்து மூன்றாவது நாளில் நகைகளை திருடிக் கொண்டு மாயமானதும் தெரிந்தது.

இதையடுத்து அவர் குறித்து போலிஸார் விசாரணை நடத்தியபோது அவர் காதலன் ஜெகநாதன் என்பவருடன் சேர்ந்து கொண்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு மதுரையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி தெரிந்த உடன் போலிஸார் அங்குச் சென்று தேவி மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 207 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.34000 பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று வேறு இடங்களில் எங்காவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தண்டவாளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து Reels.. வேகமாக வந்த இரயில் மோதி 9-ம் வகுப்பு மாணவன் உடல் சிதறி பலி !