Tamilnadu

சூடானில் தொடரும் உள்நாட்டு போர்.. இதுவரை 95 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்பு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அந்த நாட்டில் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுவதால் அங்குள்ள வெளிநாட்டினரை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவும் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ்.தர்காஷ் மற்றும் விமானப்படையின் விமானங்கள் மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

இதன்மூலம், இந்தியர்களை சூடான் துறைமுகம் வரவழைத்து அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்து அதன்பிறகு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். இதுவரை சூடானிலிருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:- சூடானில் உள்நாட்டு போர் நடை பெறுவதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

சுமார் 400 பேர் வரை சூடானில் இருப்பதாக அறிந்தாலும் இது வரை 160 பேர் தாயகம் வருவதற்காக பதிவு செய்துள்ளனர். அவர்களை பற்றிய விவரங்களை ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இன்னும் 2 நாளில் அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூடானில் கலவரம் ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவதற்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாற்றி வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு 22 பேர் வந்தனர். மேலும் 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு, டிக்கெட் செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசு செய்து வருகிறது.

சூடானில் இருந்து வசதியான சிலர் தங்களது சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்களுக்கும் உதவி தேவையா என கேட்டு அதன் அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் இன்று மேலும் 9 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், சூடான் நாட்டிலிருந்து இதுவரை 95 தமிழர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read: “சூடான் போர்: தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு” - முரசொலி தலையங்கம் வலியுறுத்தல் !