Tamilnadu

“ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும்..” - அமைச்சர் உதயநிதி சார்பில் அண்ணாமலைக்கு பறந்த அடுத்த நோட்டீஸ்..!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 5 நாட்களுக்கு முன் திமுக குறித்தும், திமுக ஊழல் செய்ததாகவும் பல்வேறு போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் போலியான சொத்து விவரங்களையும் குறிப்பிட்டு குற்றசாட்டுகளை வைத்தார். இதையடுத்து அண்ணாமலை கூறியதற்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றும், விரைவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்போவதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அவதூறு பரப்புவதற்காக திமுக மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சுமத்திய அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி வில்சன் எம்.பி நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த நோட்டீஸில், "மக்களுடைய பணத்தை ஒப்பற்ற அளவில் திமுக கொள்ளையடித்துள்ளது என்றும், அது ராபர்ட் கிளைவை விட அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று எங்கள் கட்சிக்காரர் (client) கூறுகிறார். திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம்.

இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு. எனவே, திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பாக நான் கூறிக்கொள்வது : உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை முன்வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி மூலம் அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், ஆதாரமற்ற போலியான குற்றசாட்டை பரப்பியதற்கு ரூ.50 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவதூறு கருத்துக்கு அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணாமலைக்கு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: “ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும்..” -ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலைக்கு திமுக அதிரடி நோட்டீஸ்!