Tamilnadu

குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் 11 புதிய அறிபிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,10,000 தனி வீடுகள் கட்டப்படும்.

2. நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 30,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

3. பெரும்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டப்பகுதியில் ரூ.7.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்படும்.

4. பெரும்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டப்பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் 30 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் குடிநீர்த் தொட்டி அமைக்கப்படும்.

5. பெரும்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டப் பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் பொருட்டு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானம் கட்டப்படும்.

6. மறு குடியமர்வு செய்யப்பட்ட கண்ணகி நகர் திட்டப்பகுதியில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டப்படும்.

7. மறுகுடியமர்வு செய்யப்பட்ட நாவலூர் திட்டப்பகுதியிலுள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் தளம் கட்டப்படும்.

8. சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டப்பகுதிகளில் உள்ள மனைகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

9. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 4 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திலும் திட்டப்பகுதிகளின் பராமரிப்புப் பணிகளை நல்லமுறையில் மேற்கொண்டு திட்டப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்படும் முதல் மூன்று குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு முறையே ரூ.1,00,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

10. வாரிய குடியிருப்புகளில் வாழும் இளைஞர்களின் திறன்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்தும் பொருட்டு திட்டப்பகுதிகளில் இளைஞர் மன்றங்கள் அமைக்கப்படும்

11. வாரிய திட்டப்பகுதிகளில் வாழும் 12,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புகள் பெற ஊக்குவிக்கப்படும்.

Also Read: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - கலைஞர் நூற்றாண்டு முனையம் என பெயர்: ஜூனில் திறந்து வைக்கும் முதலமைச்சர்!