Tamilnadu

Escalatorல எப்படி ஏறணும் டீச்சர்.. கைப்பிடித்து கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்: சென்னையில் நடந்த சுவாரசியம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு என்று தனியாக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களை உலக தரத்தில் உருவாக்க அவர்களுக்கு என்று தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிறார் இலக்கிய திருவிழா - 2023 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உட்பட பல்வேறு வகைப் போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில், மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவரகள் சிறார் இலக்கிய திருவிழா மார்ச் 27 துவங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழ் மொழியின் அடையாளமாக விளங்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கதைசொல்லிகள், ஊடகவியலாளர்கள் என ஏராளமான துறையை சார்ந்தோர், மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் உரையாடி மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் மொழிவளம், உரைநடை, கட்டுரை, கதை, பேச்சு போன்ற பிரிவுகளில் முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறார் இலக்கியத் திருவிழாவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று இதன் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறார் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க வந்த மாணவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள Escalator படிக்கட்டுகளை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உடன் பார்த்துள்ளனர். இதில் எப்படி ஏற வேண்டும் என கற்றுக் கொடுக்கும் படி தங்களது ஆசிரியர்களின் கைகளைப் பிடித்துக் கேட்டுள்ளனர்.

பின்னர் ஆசிரியர்களும் மாணவர்களின் கைகளைப் பிடித்து அவர்களுக்கு எப்படி Escalator செல்ல வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளனர். சிறார் இலக்கியத் திருவிழா நடந்த இந்த ஐந்து நாட்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் Escalatorல் ஏறியும், இறங்கியும் மகிழ்ச்சியுடன் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த சிறார் இலக்கிய திருவிழாவுன் சேர்ந்து இலக்கிய அறிவை ஊட்டியது போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு Escalator அனுபவத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது பள்ளிக் கல்வித்துறை என்றால் அது மிகையல்ல.

Also Read: அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘இலக்கிய திருவிழா’ : படைப்பாற்றலை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு திட்டம்!