Tamilnadu

விடாத ஆசை.. போதையில் ஓடும் இரயில் முன் Selfie எடுத்த இளைஞர் பலி.. காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம் !

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருப்பதி என்பவர் தனது மகனான காங்கேயத்தான் (22) என்பவருடன் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான காங்கேயத்தான் வேலை தேடி வருகிறார். இருப்பினும் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகிய மூன்று பேருடன் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்-விருத்தாசலம் ரயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் அனைவரும் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் விரைவு இரயில் ஒன்று வந்துள்ளது. அந்த இரயிலை பார்த்த காங்கேயத்தான், தான் இரயில் முன் செல்பி எடுக்கப்போவதாக நண்பர்களிடம் சவால் விட்டு ஓடி வந்துள்ளார். அப்போது அதி வேகமாக வந்த இரயில், ஓடி வந்த காங்கேயத்தான் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி துண்டாக உயிரிழந்தார்.

காங்கேயத்தான் ஓடுவதை கண்டதும் அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களில் ஒருவரான சபரி, இரயில் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து கால்வதுறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சிதறி கிடந்த காங்கேயத்தான் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காங்கேயத்தான் நண்பர் சபரியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இந்த கோர விபத்து குறித்து சேலம் இரயில்வே அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் உடல் சிதறி இருந்ததோடு, காப்பாற்ற சென்ற அவரது நண்பர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு இலவச Scooty" -அமித்ஷா அறிவிப்பு.. இரட்டை வேடம் என இணையவாசிகள் விமர்சனம்!