Tamilnadu

“வட மாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது” : கோவை ஆணையாளர் பேட்டி!

கோவையில் நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரை உடனடியாக கைது செய்தனர்.

மேலும் அச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு குறித்து அரசு மற்றும் காவல் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பெயர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். மேலும் ஏதேனும் புகார்கள் இருந்தாலும் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் அதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற போது கைது செய்யபட்டவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது இது குறித்து மேற்கு வங்காள தொழிலாளர்களிடம் கலந்துரையாடியுள்ளோம். இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. மேலும் இதில் சூர்யா என்கின்ற முருகன் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினரே தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அலைபேசி எண்கள் அச்சிட்ட கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் உடனடியாக 100க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து தொடர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஸ் உடனிருந்தார்.

Also Read: வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது .. போலிஸ் அதிரடி நடவடிக்கை!