Tamilnadu

வழக்கறிஞர் கொலை வழக்கு : 7 பேர் கைது - துப்பாக்கி சூடு நடத்தி முக்கிய குற்றவாளியை பிடித்த போலிஸ் !

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி கோரம்பள்ளத்தில் உள்ள அவரது நகை அடகு கடையில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலிஸார் பெயர் குறிப்பிட்ட 11 பேர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் இதுவரை நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களையும் சேர்த்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை போலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயப்பிரகாஷ் என்பவர் தட்டப்பாறை அருகே உள்ள மறவன்மடம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து எஸ்.ஐ ராஜபிரபு, போலிஸ் சுடலை கண்ணு ஆகியோர் ஜெயபிரகாசை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் போலிஸாரை தாக்கியதையடுத்து, எஸ்.ஐ ராஜ பிரபு ஜெயபிரகாசின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்தார்.

இதையடுத்து காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, போலிஸ் சுடலை கண்ணு ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Also Read: மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் அடித்து கொலை.. தொடரும் இந்துத்துவ கும்பல் அராஜகம்!