Tamilnadu

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஷீபா வாசு காலமானார்.. முதலமைச்சர் & திமுக தலைவர்கள் இரங்கல் !

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 122வது வார்டில் போட்டியிட்டவர திருமதி ஷீபா வாசு. அப்போது சுமார் 4,600-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார். இவர் திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ஆவார்.

மக்கள் சேவையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்ட இவருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஷீபா வாசு காலமானார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஷீபா வாசு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தி.மு.கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திருமதி. ஷீபா வாசு அவர்கள் இன்று (16-02-2023) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன்.

மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122-ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைமை செயற்குழு உறுப்பினரும், 122-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அக்கா ஷீபாவாசு அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. ஆழ்ந்த இரங்கல். ஷீபா அக்காவின் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் .

தயாநிதி மாறன் எம்.பி, தனது ட்விட்டர் பக்கத்தில், "கழகத்தின் மூத்த முன்னோடியாக திகழ்ந்த மறைந்த திரு.வாசு அவர்களின் துணைவியாரும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மயிலை பகுதி 122ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான திருமதி.ஷீபா வாசு அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மயிலை வேலு தனது ட்விட்டர் பக்கத்தில், "இயக்கத்திற்காக தன் குடும்பத்தில் உள்ள ஓவ்வொருவரையும் அர்பணித்து பணியாற்றி வந்தவரும், கழகதலைவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும், கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், 122 வது மாமன்ற உறுப்பினருமான திருமதி ஷீபாவாசு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமடையசெய்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், "கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சி 122-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் தொடர்பு அலுவலர், திரு.பிரபுவின் தாயாருமான திருமதி.ஷீபா வாசு மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

அவரை இழந்து தவிக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்." என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அரசியல் தலைவர்கள் திமுக தலைவர்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “பெருநிறுவனங்களுக்கு கடன் கொடுத்து, அதை ஈடுகட்ட பொதுமக்கள் மீது வட்டியை திணிக்கிறார்கள்” -முரசொலி தாக்கு!