Tamilnadu

"சுயமரியாதையை இழந்துவிட்டு கமலாலய வாசலில் காத்துகிடக்கும் EPS - OPS" .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்!

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 6, வார்டு 78 ல் அறிஞர் அண்ணா மாளிகையைத் திறந்து வைத்து, 9 ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களுக்குச் சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

பிறகு இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேம்பாட்டு நிதியிலிருந்து மற்றும் மாநகராட்சி நிதியில் இருந்தும் ரூ. 6 கோடிக்கு அண்ணா திருமண மண்டபத்தை மிகச் சிறப்பாகக் கட்டி முடித்துள்ளார்கள். தனியார் திருமண மண்டபத்திற்கு நிகராக இந்த கட்டிடத்தை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது.

ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை எழும்பூர் தொகுதிகளுக்குக் கொண்டு வந்துள்ளார். இந்நாள் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்பாகத் தொகுதியில் பணியாற்றி வருகிறார். வீடுகளை இழந்த பல்வேறு குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் வீடுகளை வழங்கியுள்ளார்.

மணமக்களுக்கு ஒரு அறிவுரை மட்டும் கூறுகிறேன். இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல வாழாதீர்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். எந்த காலத்திலும் எங்கள் வாகனம் கமலாலயம் செல்லாது என்று தெரிவித்த அவர்கள் நேற்று இரண்டு மணி நேரத்துக்கு மேலாகக் கமலாலய வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "காந்தி சொன்னதைபோல் ஆளுநர் மாளிகைகளை மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம்": வைகோ கோரிக்கை!